தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் நிவாரணம் அறிவிப்பில், ரூ.1011.29 கோடியா? ரூ.450 கோடியா? - உண்மை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 10:19 PM IST

chennai flood Relief Fund: மத்திய அரசின் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு உண்மைக்கு புறப்பான தகவல்களை மக்களுக்கு அளிப்பதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dmk Fact Check Team Reaction on Relief Fund
மிக்ஜாம் புயல் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காகத் தமிழக அரசிற்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து திமுக உண்மைச் சோதனைக் குழு விளக்கியுள்ளது.

அதில், "மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடி அறிவிப்பு என்ற தலைப்பில், 'மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்திற்கு ரூ.1011.29 கோடி அறிவித்தது ஒன்றிய அரசு. பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து 450 கோடி ரூபாயும், நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப் பிரதமர் மோடி ஒப்புதல்' என ஒரு ஊடகம் ஷேர் கார்டு வெளியிட்டுள்ளது. அதை பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடி அறிவிப்பு என்ற தகவல் முற்றிலும் தவறானது. இது போலி செய்தி. உண்மை என்னவென்றால், விஷன் 2047-ன் கீழ், பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் வகையில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக 13.06.2023 அன்று டெல்லியில் மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை அடுத்து சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற ரூ.561.29 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்வதாக 09.08.2023 அன்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.

சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் என்பது, நகரத்தில் உள்ள பழைய சிறு நீர்நிலைகளுக்கு உபரி கால்வாய்களைச் சீரமைத்தல், 484 ஏக்கர் பரப்பளவில் உள்ள எட்டு நீர்நிலைகளை மீட்டெடுத்தல், வெள்ளப்பெருக்கின் போது ரெகுலேட்டர்களை தொலைதூரத்தில் இயக்குவதற்கான மென்பொருளை நிறுவுதல் ஆகியவை ஆகும். இந்த திட்டம் கடந்த மூன்று மாதங்களாக அறிவிப்போடு மட்டுமே உள்ளது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது, புயல் வெள்ளத்தால் அல்லது வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய பணிகளை மேற்கொள்வதும், இழப்பை ஈடுகட்ட நிதி உதவி வழங்குவதும் ஆகும்.

நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் இனிவரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்பு பணி திட்டத்திற்கான நிதியாகும். இந்த உண்மையை அறியாமலோ அல்லது அறிந்தும் மறைத்தோ சில ஊடகங்கள் 'மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடி அறிவிப்பு' என செய்தி வெளியிட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் நிவாரணமாக 5060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாகத் தேவை என ஒன்றிய மோடி அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், 'யானை பசிக்கு சோளப்பொரி' என்பது போல வெறும் ரூ.450 கோடியை ஒதுக்கி தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு எப்போதும் போல வஞ்சித்துள்ளது.

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை மக்களிடம் அதிகமாகக் காட்டுவதற்காக இனி மேற்கொள்ள உள்ள திட்டத்திற்கான தொகையையும் சேர்த்து மோசடியாகப் போலி செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டது அபத்தம்.

கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்ட திட்டத்தை மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்கான புதிய திட்டம் போல ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அறிவித்தது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் கேவலமான எண்ணம் தவிர வேரில்லை.

அவதூறு அல்லது போலி தகவலைப் பரப்புவதில் பாஜகவில் தொண்டன் முதல் தலைவன் வரை எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பதை அமித்ஷாவின் செயல் காட்டுகிறது." என்று திமுக உண்மைச் சோதனைக் குழு(Fact check) குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க:திருநெல்வேலி மேயருக்கு எதிராக மீண்டும் திமுக கவுன்சிலர்கள் போர்கொடி.. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு..!

ABOUT THE AUTHOR

...view details