ETV Bharat / state

திருநெல்வேலி மேயருக்கு எதிராக மீண்டும் திமுக கவுன்சிலர்கள் போர்கொடி.. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 4:51 PM IST

Tirunelveli Mayor Saravanan: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி திமுக கவுன்சிலர்களே ஆணையரிடம் மனு அளித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நெல்லை மாநகராட்சி விரைவில் களையுமா? மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்..கவுன்சிலர்கள் போர்க்கொடி..பின்னணி என்ன?

நெல்லை: நெல்லை மாநகரில் உள்ள 55 வார்டுகள் உள்ளடக்கிய நெல்லை மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே, மேயரை மாற்ற கோரி தொடர்ச்சியாக அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, நெல்லை மாநகர திமுகவில் நிலவும் உள்கட்சி பூசல் காரணமாகவே, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மேயர் சரவணன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேயர் கவுன்சிலர்கள் இடையே நிலவும் இந்த மோதல் போக்கினால், நெல்லை மாநகராட்சியில் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கி கிடப்பதாக ஒரு குற்றச்சாட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை நடந்த மன்ற கூட்டங்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் மோதல் நடவடிக்கையால் பல்வேறு கூட்டங்கள் பாதியில் முடிந்தன. மேலும், மேயரை மாற்ற கோரி துணை மேயர் ராஜூ உள்பட 30-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் சென்னை சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மனு அளித்தனர்.

இதையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மேயரை அழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அமைச்சர் பேச்சையும் மீறி தொடர்ந்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மேயரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்

இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக 'நம்பிக்கையில்லா தீர்மானம்' கொண்டு வரும்படி, சுமார் 38 திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவ்வை சந்தித்து இன்று (டிச.7) மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில், 'மேயரின் நடவடிக்கை சரியில்லை என்றும் மக்கள் பணிகளை நிறைவேற்றுவதில் மேயர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மேயரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுகம் தாக்கரேஞானதேவ்ராவை தொடர்பு கொண்டபோது, கவுன்சிலர்கள் அளித்துள்ள மனுவை பெற்றுக்கொண்டேன். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டரீதியாக ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். சட்டப்படி கவுன்சிலர்கள் அளித்துள்ள மனுவை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் 15 நாட்களுக்குள் கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

மேலும், ஒரு மாதத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுத்து சிறப்பு மன்ற கூட்டத்தைக் கூட்டி, அதில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். நெல்லையில் கவுன்சிலர்கள் மேயர் மோதல் போக்கு நீடித்து வந்த சூழ்நிலையில் கட்சி தலைமை பேச்சையும் மீறி திமுக கவுன்சிலர்கள் தன்னிச்சையாக செயல்பட்டதோடு, மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்படி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ள சம்பவம் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: விவசாயிடம் லஞ்சம் கேட்கும் சத்தியமங்கலம் வேளாண்மைத்துறை அதிகாரி.. கசிந்த காணொளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.