ETV Bharat / state

சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்

author img

By

Published : Apr 28, 2023, 3:43 PM IST

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டத்தில், தன்னை சாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது குற்றச்சாட்டு.. தொடரும் உட்கட்சி பூசல்
சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது குற்றச்சாட்டு.. தொடரும் உட்கட்சி பூசல்

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டத்தில், சாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், இதில் திமுக கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர். தவிர, அதிமுக நான்கு உறுப்பினர்களுடன் உள்ளது. இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், இன்று (ஏப்ரல் 28) மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை வகித்தார்.

மேலும், துணை மேயர் ராஜு மற்றும் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் தொடங்கியது. அப்போது, திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்றும், எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், 27 உறுப்பினர்களுக்கு மேல் அவையில் உள்ளதால், போதுமான அளவு இருப்பதாக ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பதில் அளித்தார்.

இருப்பினும், திமுக கவுன்சிலர்கள் அவையின் மையப்பகுதியில் நின்று முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி, அவரவர் இருக்கைக்கு ஆணையாளர் அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் தங்கள் இடங்களில் நின்று கொண்டு அவசரக் கூட்டத்தில் உள்ள தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், அவசரக் கூட்டத்தை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அவசரக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புதிய பணிகளுக்கு டெண்டர் கோரப்படுவதற்கான அவையின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது. மேயர் குறிப்பிட்டு தொடர்ந்து தீர்மானங்களை ஒத்தி வைத்து சென்றால் மக்கள் பணி செய்ய முடியாது எனத் தெரிவிக்க கூட்டத்தில் களேபரம் ஏற்பட்டது. மேயர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தியின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து அமளி ஏற்பட்டு வந்ததால், கூட்டத்தை 10 நிமிட நேரம் ஒத்தி வைப்பதாக கூறி மேயர் அவையில் இருந்து வெளியேறினார். அமளி தொடர்ந்து நீடிக்கவே கூட்டம் ரத்து செய்யப்படுவதாக துணை மேயர் அறிவித்தார். இதனிடைய 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஜய் மண்டபத்தின் மையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், அவர் மேயர் தன்னைச் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும், அவர் நடத்தும் அவையில் என்னால் இருக்க முடியாது என்றும் முழக்கமிட்டார். இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் அவைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஜய் உடன் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் மேயர் ஆதரவு தரப்பினர், ஒரு தனி நபருக்காக மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துகின்றனர் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து அவையில் இருந்து வெளியேறிய கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சியின் சிறிய கூட்ட அரங்கில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதிலிருந்தும் மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் ஒரு சிலரை வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் ஆதரவு பெற்ற துணை மேயர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

அவர் (அமைச்சர் கே.என்.நேரு) துணை மேயர் உள்ளிட்ட உறுப்பினர்களை சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். மேலும், சமீபத்தில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வெளிப்படையாக கமிஷன் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக கவுன்சிலர் தள்ளியதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.