தமிழ்நாடு

tamil nadu

ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை திருத்த கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:25 PM IST

madras high court: ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
Chennai high court

சென்னை: நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யக் கோரி மத்திய சட்ட ஆணையம், மாநில சட்ட பணிகள் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், தனது உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து இருந்தனர்.

இதையும் படிங்க:Aiadmk Case: பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மீண்டும் வெற்றி.. தீர்ப்பின் முழு விபரம், ஓபிஎஸ் பதில் என்ன?

ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதை அடுத்து, வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டங்களில் என்னென்ன திருத்தங்களை செய்ய வேண்டும் எனச் சொல்கிறீர்கள் என தலைமை நீதிபதி, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், குறிப்பிட்ட சட்டங்களை, குறிப்பிட்ட வகையில் திருத்தம் செய்யும்படி நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும் எனவும், சட்டப் பணிகள் ஆணையம் சட்டம் இயற்ற முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதைத்தொடர்ந்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் உண்மைத் தன்மையை நிரூபிக்க செலுத்திய ஒரு லட்சம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை ஏதேனும் ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மீதமுள்ள 75 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:Madurai Train Fire : சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து... 8 பயணிகள் பலி! கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து?

ABOUT THE AUTHOR

...view details