சென்னை:கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (ஜூன் 1) வெளியிட்ட சுற்றறிக்கையில், பின்வருமாறு கூறப்படுள்ளது:-
- 'ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு கோயில் விழா குழுவால் மனு அளிக்கப்பட்டால் மனுவின் மீதான முடிவு ஏழு நாள்களுக்குள் விழாக்குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அப்படி ஏழு நாள்களில் அனுமதி வழங்கவோ, அனுமதி மறுக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், எட்டாம் நாள் விழாக்குழு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம்.
- அத்தகைய அனுமதியின் பேரில், விழாக் குழுவின் பொறுப்பான உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பாளர்கள், திருவிழாவிற்குச் சம்பந்தப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதையும், ஆபாசமான காட்சிகள் / நடனம் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
- ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது.
- ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் அவர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது.
- கோயில்களில் இறை வழிபாட்டிற்காக இசைக்கப்படும் பாடல்கள் அல்லது இரட்டை அர்த்தப் பாடல்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் இடம் பெறக் கூடாது.
- ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது அல்லது போதைப் பொருள் எதுவும் விநியோகிக்கப்படக் கூடாது.
- நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் அவர்கள் மேல் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் குறித்து அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களின் கீழ் உள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய ஏழு நாள்களுக்குள் அனுமதி வழங்கி, விதிமுறைகளை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடல் பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால் ஏழு நாட்களுக்குள் காவல்துறை அதிகாரி பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் அல்லது அனுமதி இல்லை என எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கடந்த மே 24ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புறங்களில் அனுமதி தரவேண்டும் எனக் கோரி, பல்வேறு நபர்கள் தனித்தனியாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.