சென்னை:கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமச்சேரி என்கிற பகுதியிலுள்ள வழிபாட்டுத் தளத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு - கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டு உள்ளார். கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் திருச்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதும், இது ஒரு தீவிரவாத செயல் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தமிழ்நாடு எல்லையோர வழியாக தப்பிச் செல்ல முயற்சிக்க வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழக வனப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களான கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், வனப்பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறையுடன், வனத்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்பது, அருகே இருக்கக்கூடிய விடுதிகளை கண்காணிப்பது போன்ற பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேப்போல தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களிலும், ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருள் உள்ளதா என்ற கோணத்தில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பின்னரே பயணிகள் ரயில் நிலையங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வெளியூரில் இருந்து ரயில்களில் வரும் பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க:கேரளா குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சியில் சிக்கிய நீல நிறக் கார்! என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!