தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்வைக் காக்க வேண்டும் - சி.வி.சண்முகம்

By

Published : Aug 4, 2021, 9:35 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்த அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்வினை காக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சென்னை: இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (ஆக.4) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி கைப்பேசி வடிவில் மனிதனின் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது.

நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள், இளைய சமுதாயத்தினர் தங்களது படிப்பு, அறிவு, வாழ்வின் முன்னேற்றத்துக்கு இந்த விஞ்ஞான புரட்சியினை பயன்படுத்துகின்றனர். நல்லவற்றுக்கு துணை நிற்கும் இந்த விஞ்ஞான புரட்சியை, ஒருசிலர் தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி, இக்கால இளைஞர்களின் ஆசையை தூண்டி, தகாத செயல்களுக்கு உபயோகப்படுத்தி வருவது வருந்தத்தக்கது.

பப்ஜி, ரம்மி

பப்ஜி, ரம்மி போன்ற விளையாட்டுகளை ஆன்லைன் மூலமாக அறிமுகப்படுத்தி, தற்கால இளைஞர்களை ஒரு நாசக்கார கூட்டம் சீரழித்து வந்தது. இதுபோன்ற சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

பணம் சம்பாதிக்கும் ஆசை

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இளைஞர்களின் வாழ்வை தலைகீழாக புரட்டி போட்டது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர். பண இழப்பை தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.

அன்றைய தினத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து, அரசு ஏன் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டது.

ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை

இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தினை தடுக்க, பொதுமக்கள், தாய்மார்கள், பல்வேறு அமைப்புகள் மூலமாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அப்போதைய அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து, 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு இயற்றிய இச்சட்டத்துக்கு உயர்நீதிமன்றமும் தனது பாராட்டை தெரிவித்தது.

அதன்படி, அமலுக்கு வந்த சட்டம், கோடிக்கணக்கான பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்த்தது. இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபொழுது, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றதால், இவ்வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதிமுக அரசு இயற்றிய சட்டம் ரத்து

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, அப்போதைய அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முறையாக வாதாடவில்லை

கடந்த இரண்டு மாதங்களாக, பிரபல உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, இந்த திமுக அரசு உள்நோக்கத்தோடு சரியான முறையில் பிரபல மூத்த வழக்கறிஞர்களை நியமித்து முறையாக வாதாடவில்லை என்றே தெரிகிறது.

வாதத்தின்போது மூத்த வழக்கறிஞர்கள், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தையும் ஒப்பிட்டு வாதிட்டனர்.

ஜல்லிக்கட்டு போன்ற இளைஞர்களின் உடல் திறனை வெளிக்கொணரும் வீர விளையாட்டோடு, ஆன்லைன் சூதாட்டத்தை ஒப்பிட்டு மெத்த படித்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், இதற்கு எதிரான வாதத்தினை திமுக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உரிய முறையில் எடுத்து வைக்காதது விந்தையாக உள்ளது.

இளைஞர்கள் வாழ்க்கை நாசம்

விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமிழ்நாடு இளைஞர்களை இருட்டு குகையில் தள்ளி, அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆன்லைன் ரம்மியை நடத்தலாம் என்று தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் சூதாட்ட நிறுவனங்கள் தங்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கும், புதியவர்களுக்கும் கீழ்கண்டவாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார்கள்.

நீங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்; உங்கள் கணக்கில் நாங்கள் 5,500 ரூபாயை இலவசமாக தருகிறோம். அதை வைத்து விளையாட தொடங்குங்கள் என்று ஆசை காட்டி செய்தி அனுப்புகிறார்கள்.

இடைக்கால தடை

இதைத் தடுப்பதற்காக, உடனடியாக திமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இடைக்கால தடை பெற வேண்டும். அப்போதுதான், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் பிடியில் இருந்து தமிழ்நாடு இளைஞர்களை காப்பாற்ற முடியும்.

மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, புதிய சட்டம் கொண்டு வரும் வரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடையாணை பெற மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வற்புறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details