சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நவ.27ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிச.2ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, டிச.3ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த மிக்ஜாம் புயல் டிச.4ம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை முதல் அதி கனமழை பெய்தது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இந்த புயலால் சென்னை மாநகரம் மொத்தமும் வெள்ளக்காடாக மாறியது. சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மழை நீர் புகாத வீடும் இல்லை, தேங்காத இடமும் இல்லை என்றானது.
இதனால் சென்னையில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பேருந்து, ரயில், விமான சேவை என அனைத்துமே ரத்து செய்யப்பட்டது. இந்த மிக்ஜாம் புயலால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வரை மீட்புப் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில், அன்று மாலையில் இருந்தே மழை குறைந்து நேற்று (டிச.5) மழை முற்றிலும் நின்றது. ஆனால் சென்னையில் உள்ள பல இடங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நகரமே வெள்ளக்காடாக தத்தளித்தது. இதனால் மீட்புப்பணி அதிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
இருப்பினும், பல இடங்களில் மின்சார இணைப்பு இன்னும் வரவில்லை, ஆவின் விநியோகம் தாமதாகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் சென்னையில் குறையவில்லை. இருந்தும், சில இடங்களில் படிப்படியாக பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. எந்தெந்த பகுதியில் சீரமைப் பணிகள் நிறைவடைந்துள்ளது, எங்கு தற்போது நடந்து வருகிறது, புயலால் ஏற்பட்ட தேங்கள் என்ன என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.