தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Apr 27, 2023, 3:24 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian
அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னைஎழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் ஆர்ச் சிட்டி சார்பில் ரூ.68 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரோட்டரி சங்கம் மருத்துவ கட்டமைப்புகளுக்குப் பேருதவி அளித்து வருகிறது. போலியோ ஒழிப்புக்கு ரோட்டரியின் பங்களிப்பு முக்கியமானது. பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருந்தது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து அவை சிறந்த வகையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

தற்போது ரூ.68 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா சவுண்டிங் லேப்ராஸ்கோப்பிக் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 57 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. உறுப்பு மாற்று சிகிச்சை தனிப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.

மருத்துவமனை கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரூ.65 கோடி செலவில் நரம்பியல் சிகிச்சைக்கான கட்டடம் கட்டப்பட உள்ளது. ரூ.125 கோடி மதிப்பீட்டில் கேஎம்சி மருத்துவமனையில் டவர் பிளாக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.35 கோடி செலவில் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ரூ.64.90 லட்சம் மதிப்பீட்டில் மாணவியர் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கட்டப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் தினசரி கரோனா பாதிப்பு 510 வரை இருந்தது. தற்போது 3 நாட்களாக குறைந்து 424ஆகப் பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் தினசரி பாதிப்பு 7,000 ஆக குறைந்திருக்கிறது.

பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. 5-6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மிதமான தொற்று என்கின்ற வகையில் இருந்து வருகிறது. இதனால் அதி தீவிர சிகிச்சையோ, ஆக்சிஜன் தேவையோ தேவைப்படாத நிலை உள்ளது‌. மேலும் நாளை (ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்பட்டாலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் ஆடு மேய்த்த விவசாயி மின்னல் தாக்கி பலி!

ABOUT THE AUTHOR

...view details