தமிழ்நாடு

tamil nadu

பெரியார் - மணியம்மை குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்த துரைமுருகன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:51 PM IST

திமுக பவள விழாவில் பெரியார் - மணியம்மை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையான நிலையில், தனது பேச்சில் பயன்படுத்திய வார்த்தைக்காக தான் வருந்துவதாக துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

Controversy talk about Periyar and Maniammai Minister Duraimurugan regret about his speech
துரைமுருகன்

சென்னை: அண்மையில் வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், பெரியார் மணியம்மை பற்றி பேசினார். அந்த கருத்து திராவிடர் கழகத்தினரிடைய வருத்தம் அடையச் செய்தது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும்போது, கட்சிக்கும், ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கும் இருந்த தொடர்புகளை குறித்து பேசிக் கொண்டு வரும்போது, திமுக தோன்றியதற்கே காரணம் வேலூர் மாநகரம்தான்.

வேலூருக்கு பிரச்சாரத்திற்கு வந்த பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர் காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்து விட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார்.

இது பொருந்தாத் திருமணம் என்று அண்ணாத்துரை திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், ‘தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்’ என்று சொல்ல வேண்டிய இடத்தில், ‘தந்தைப் பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்’ என்று பேசிவிட்டேன். ‘அழைத்துக் கொண்டு போனார்’ என்பதற்கும் ‘கூட்டிக் கொண்டு போனார்’ என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

என்னுடைய இந்த பேச்சு திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கும், பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரிடமும், வீரமணியிடமும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details