சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர், கோவிந்தராஜன். இவர் மே 3ஆம் தேதி ஆழ்துளைக்கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு சர்வே எண்களுடன் உள்ள நிலத்திற்கான பட்டாவை, தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு பரிந்துரை மனு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை எதிர்த்து, கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் மனுதாரரையும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களையும் விசாரிக்க வேண்டிய பணி 6 மாதங்களாகியும் முடிக்கப்படாததை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து 2 மாதத்திற்குள் மனு மீது முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
மேலும், வருவாய்த்துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறு ஆய்வு மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதை வருவாய்த்துறையினர் முறையாக பின்பற்றவில்லை என்பதை நீதிபதி தன் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.