தமிழ்நாடு

tamil nadu

17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...

By

Published : Jul 23, 2021, 1:46 PM IST

மழை
மழை

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 23) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

எஞ்சிய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை நிலவரம்

24.07.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

25.07.2021, 26.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

27.07.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல்

23.07.2021 முதல் 24.07.2021 வரை: தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

23.07.2021 முதல் 25.07.2021 வரை: தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக் கடல்

23.07.2021 முதல் 27.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.07.2021 முதல் 27.07.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா: ஒரே நாளில் 38,740 பேர் குணமடைந்தனர்

ABOUT THE AUTHOR

...view details