தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்திற்கான உரிய காவிரி நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

By

Published : Aug 4, 2023, 3:21 PM IST

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தற்போதுள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்றிடவும், காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தற்போதுள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் எல்லா வருடமும் குறுவை சாகுபடிக்காக காவிரி நீரை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளதால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய நீரை உடனடியாக திறந்து விட வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களை போல் தமிழ்நாடு அல்லாமல், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுவதாகவும், குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்து உள்ளது என்று கூறியுள்ளார்.

கர்நாடக அரசு, மாதாந்திர அட்டவணைப்படி பிலிகுண்டுலுவில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உள்ளதாகவும் ஆனால் இந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023 - 2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டிஎம்சி தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில் 11.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாகவும். கர்நாடகாவில். 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டிஎம்சியில் 91 டிஎம்சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும், கர்நாடக அரசு 28.8 டிஎம்சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காவிரி டெல்டாவின் மேட்டூர் அணையில் 2023 ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று நிலவரப்படி 26.6 டிஎம்சி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இப்போது இருக்கும் நீரானாது குடிநீருக்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால் குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து அதிக மகசூல் பெற, இன்னும் 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுவதாகவும்
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் இதனை கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டதாகவும், கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும் அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்வதாகவும், ஏற்கனவே அரிசித் தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ள நிலையில் காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காத்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சர்" - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதியை விளாசிய அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details