தமிழ்நாடு

tamil nadu

வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை - முதலமைச்சர் பேச்சு

By

Published : Apr 20, 2023, 5:29 PM IST

வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்கவும், அனைத்து தரப்பு மக்களிடம் அமைதியை நிலைநாட்டவும் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேங்கை வயல் விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் பேச்சு
வேங்கை வயல் விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் பேச்சு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ சிகிச்சையில் உட்படுத்தப்பட்டபோது, மாசடைந்த குடிநீரைப் பருகியதால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த கிராமத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினர், அங்கு உள்ள மேல்நிலைத் தொட்டியில் ஆய்வு செய்தபோது, அதில் மனிதக் கழிவு கலந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தத் தொட்டி மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக 2022 டிசம்பர் 25ஆம் தேதி வெள்ளலூர் காவல் நிலையத்தில் கனகராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தடயவியல் விவரங்கள், நீதிமன்ற உத்தரவின்படி சென்னைக்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம், அங்குள்ள அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக கூறினார்கள்.

மேலும், ஒரு குறிப்பிட்ட தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்கள். இது தொடர்பாக புகார் பெறப்பட்டு, அப்பகுதி மக்கள் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். இரட்டைக் குவளை விவகாரத்தில் தேநீர் கடைக்காரர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூக்கையா கைது செய்யப்பட்டார்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறையினர் சுழற்சி முறையில், அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. அமைதிப்பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் ஜனவரி 14ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர், சிபிஐ விசாரணை வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சத்ய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, இரண்டு மாதத்தில் அறிக்கை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அப்பகுதியில் தீண்டாமையை ஒழிக்கவும், அனைத்து தரப்பு மக்களிடம் அமைதியை நிலைநாட்டவும் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு, அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக-விற்கு தைரியம் இருந்தால் வேங்கை வயலில் புது தொட்டி கட்டாமல் பொதுத்தொட்டி கட்ட முடியுமா - சீமான் ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details