சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "விமானப்படை மற்றும் கப்பற்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் நாளை (டிச 19) தென் மாவட்டங்களில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிற மாவட்டங்களில் இருந்து 18 லாரிகள் மூலம் உணவுப் பொருட்கள் கொண்டுவரும் பணியும் துவங்கியுள்ளது. அனைத்து துரை சார்ந்த அதிகாரிகளும் களப்பணியில் இறங்கியுள்ளனர். மீட்புப் பணியில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை ஆணையர்கள் என பலர் பணியில் உள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, புயல் மற்றும் மழை பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீண்டும் அவர்களின் இயல்பு நிலைக்கு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில், தற்போது மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழக அரசு சார்பாக மக்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். குறிப்பாக வெள்ள நீரில் சிக்கியுள்ள மக்களை மீட்கப் படகுகள், உணவுப் பொருட்கள், குடிநீர் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறோம் தென் மாவட்டங்களில் மீட்புப் பணியில் சுமார் 500 படகுகள் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடியை நாளை (டிச.19) சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின்..!