தமிழ்நாடு

tamil nadu

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமான பயணிகள்!

By

Published : Jul 10, 2023, 3:33 PM IST

சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை விமானம் லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து லண்டன் செல்ல வந்த 276 பயணிகள் சென்னையில் ஏமாற்றமடைந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு வரவேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 4:30 மணிக்கு சென்னை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து 5.30 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு லண்டன் செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் செல்ல 276 பயணிகள் அதிகாலை 2:30 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து, சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். ஆனால் லண்டனில் இருந்து சென்னை வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானத்தை இயக்கி வந்த விமானி தெரிவித்துள்ளார். இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அந்த விமானி விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:Tenkasi: ஒரே நேரத்தில் 7 பேரை கடித்த வெறிநாய்; காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!

இதையடுத்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமானத்தில் ஏற்றப்படாமல் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில், விமான பொறியாளர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாது என விமான பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதோடு பயணிகள் அனைவரும் சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் நாளை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்த நிலையில் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு 276 பயணிகள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப்பயணிகள் - அருவிகளில் குளித்து உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details