தமிழ்நாடு

tamil nadu

கொலை செய்யப்பட்ட தம்பதி உடல்கள் பண்ணை வீட்டில் தோண்டி எடுப்பு

By

Published : May 8, 2022, 7:46 PM IST

Updated : May 8, 2022, 8:49 PM IST

சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி ஆகியோரது உடல்களை கொலையாளிகள் முன்னிலையில், மாமல்லபுரம், சூளேரிக்காடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறையினர் தோண்டி எடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதி உடல்கள் பண்ணை வீட்டில் தோண்டி எடுப்பு
கொலை செய்யப்பட்ட தம்பதி உடல்கள் பண்ணை வீட்டில் தோண்டி எடுப்பு

செங்கல்பட்டு:சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அனுராதா. இவர்கள் கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவில் உள்ள தனது மகள் சுனந்தா வீட்டிற்குச் சென்றிருந்தனர். சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றிருந்த இவர்கள், நேற்று (7ஆம் தேதி) அதிகாலை விமானம் மூலமாக சென்னை திரும்பினர்.

இவர்களை இவர்களது கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவர் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கார் ஓட்டுநர் கிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர். சென்னை வந்தடைந்த பெற்றோரை அமெரிக்காவில் உள்ள மகள் சுனந்தா தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயன்றார். ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்கள் உறவினர்களை, மயிலாப்பூர் சென்று பார்த்து வரும்படி சுனந்தா கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சம்பந்தப்பட்டவர்கள் சென்று பார்த்தபோது, வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தம்பதியரைக் காணவில்லை. மேலும், வீட்டில் திருடு போனதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி சுனந்தா கேட்டுக்கொண்டதன் பேரில், புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் இணை ஆணையர் தலைமையில் காவல் துறையினர் விரைந்து சென்று, ஆடிட்டர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை செய்து, அவரது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகம் எழுந்ததாகத் தெரிகிறது. உடனடியாக கிருஷ்ணாவின் செல்போனை டிரேஸ் செய்தபோது, தமிழ்நாட்டை விட்டுத் தப்பிச்செல்வது தெரியவந்தது. மேலும், டோல்கேட் பகுதிகளில் அவரின் கார் கடந்து சென்ற சிசிடிவி காட்சியும் காவல் துறை வசம் சிக்கியது.

அதனைத்தொடர்ந்து, தப்பிச்செல்ல முயன்ற கிருஷ்ணா, அவரது நண்பர் ரவி ஆகியோரை, ஆந்திர மாநில காவல்துறை உதவியுடன் தங்குதூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்து அழைத்து வந்தனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினரை கிருஷ்ணாவும் அவரது நண்பர் ரவியும் சேர்ந்து கொலை செய்து, ஸ்ரீகாந்துக்கு சொந்தமான, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், இருவரது உடல்களையும் புதைத்தது தெரியவந்தது.

ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்த ஏராளமான நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை அரங்கேறி இருப்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (மே 8), கொலையாளிகள் கிருஷ்ணா மற்றும் ரவி ஆகியோரை, சூளேரிக்காடு பண்ணை வீட்டிற்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதி உடல்கள் பண்ணை வீட்டில் தோண்டி எடுப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல் ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில், கொலையாளிகள் சுட்டிக்காட்டிய இடத்தில் ஆடிட்டர் தம்பதியினரின் உடலை, காவல் துறையினர் தோண்டி எடுத்தனர். உடற்கூராய்வுக்குப் பின் முழுமையான தகவல் தெரியவரும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை தம்பதியை கொன்றுவிட்டு ஆந்திரா போலீசிடம் சிக்கிய கொலையாளிகள்... பின்னணி என்ன?

Last Updated : May 8, 2022, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details