தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் உள்ள இந்திய தொல்பொருட்களை மீட்கக் கோரிய வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 8:02 AM IST

Indian antiquities abroad: வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தியவிற்கு சொந்தமான தொல்பொருட்களை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Indian antiquities abroad
வெளிநாட்டில் உள்ள இந்திய தொல்பொருட்களை மீட்கக் கோரிய வழக்கு

சென்னை: வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர், வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தியவிற்கு சொந்தமான தொல்பொருட்களை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்து புராதான சின்னங்கள், பழங்கால கோயில் சிலைகள் மற்றும் அரிய வகை பூஜை பொருட்கள் ஆகியவை வெளிநாட்டினரால் அபகரிக்கப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் ஏசியன் ஆர்ட் மியூசியத்திலும், சிகாகோ ஆர்ட் மையத்திலும் இருப்பதாகவும், ராஜராஜ சோழன் காலத்தில் ஆனைமங்கலம் கிராமத்தில் இருந்த தாமிர தகடுகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாமிரத்தினால் ஆன பெரிய அளவிலான 21 தகடுகளில் 5ல் சமஸ்கிருதத்திலும், 16ல் தமிழிலும் எழுதப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவிலான 3 தாமிர தகடுகளும் இருப்பதை லேடன் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்து உள்ளார். சோழர் கால தாமிர தகடுகளில், கிராமங்களின் வரைபடங்கள், வரிவசூல் முறைகள், பாசன திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், நாகப்பட்டினத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் புத்த பிக்குகளின் மத்தியில் எப்படி ஆன்மீகம் பரவியது என்பதும் தாமிர தகடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவுக்கு சொந்தமான தொல்பொருட்களை மீட்பதற்கான சிறப்பு குழுவை அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், தொல்பொருள் ஆய்வு இயக்குநரகத்திற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சொந்தமான தொல்பொருட்களை மீட்பதற்கான சிறப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு, உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, தாமிர தகடுகளை கேட்டு நெதர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள், மனுதாரர் அனுப்பிய கடித்தத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:"குழந்தைகளின் எதிர்காலம் மீது பெற்றோர் அக்கறை கொள்ள வேண்டும்" - அறிவுரை வழங்கிய நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details