ETV Bharat / state

"குழந்தைகளின் எதிர்காலம் மீது பெற்றோர் அக்கறை கொள்ள வேண்டும்" - அறிவுரை வழங்கிய நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:44 PM IST

தாயின் அரவணைப்பில் இந்தியாவில் இருக்கும் மைனர் குழந்தைகளை, அவர்களின் நலன் கருதி அமெரிக்காவில் தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்ப மறுத்து சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தம்பதிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம்
தம்பதிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தாயின் அரவணைப்பில் இந்தியாவில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, அமெரிக்காவில் இருக்கும் தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்ப அனுமதித்தால், குழந்தைகளைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து, அமெரிக்காவில் குடிபெயர்ந்த தம்பதிக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான உறவு எங்கே தொலைந்தது என்பதை புரிந்துகொள்வதற்காக, ஓராண்டு காலத்திற்கு இருவரும் பிரிந்திருக்கும்படி, மனைவியின் சகோதரர் அளித்த ஆலோசனையை ஏற்று இருவரும் பிரிந்த நிலையில், குழந்தைகளுடன் மனைவி சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மனைவியிடம் உள்ள தன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று(செப்.02) விசாரணைக்கு வந்தது. அப்போது, கணவர் தரப்பில் கல்வி, வாழ்வு, சமுதாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணும் வகையில், குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல இருப்பதால், இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கைக்குழந்தையாக உள்ள மகனை அனுப்பாவிட்டாலும், பள்ளி படிப்பில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், சிறப்பான கல்வியை அளிப்பதற்காக மகளை மட்டுமாவது அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை எதிர்த்து மனைவி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து குழந்தைகளை சந்தித்து, தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மகளை சென்னையிலேயே சர்வதேச பள்ளி ஒன்றில் சேர்த்து, கலை, விளையாட்டு ஆகியவற்றிலும் பயிற்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இரு குழந்தைகளையும் கணவனுடன் அனுப்ப முடியாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கின் விசாரணையின் போது இரு குழந்தைகளையும் அழைத்து அவர்களிடம் பேசினார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், சிறுமி போதுமான விவரம் அறிந்தவராகவும், 2 வயது குழந்தை எப்போது அக்காவின் பிணைப்பிலேயே, சுட்டிப்பையனாகவும் இருப்பதாக நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தங்களது எதிர்காலத்தின் மீது தாய், தந்தை இருவரும் அக்கறை கொண்டுள்ளதை 12 வயது சிறுமி உணர்ந்திருப்பதும், தந்தை மீது பாசமாக இருப்பதும் நன்றாக வெளிப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளியில் அனைவரும் அக்கறையுடன் கவனித்து கொள்வதாகவும், பள்ளி இறுதி படிப்பை தற்போதைய பள்ளியிலேயே முடிக்க விரும்புவதாகவும், உயர் கல்விக்கு வேண்டுமானல் அமெரிக்கா செல்ல விருப்பப்படுவதாக சிறுமி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான உணர்வுப்பூர்வமான மற்றும் நிதி ரீதியிலான பங்களிப்பை கணவர் வழங்குவதில் மனைவிக்கு ஆட்சேபனை இல்லை என்பதால், அன்பான அப்பாவாக இருந்து குழந்தைகளை ஆதரிப்பது குறித்து அவரே முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு கணவருடையது என குறிப்பிட்டுள்ளார்.

தாயின் அரவணைப்பில் இந்தியாவில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, அமெரிக்காவில் இருக்கும் தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்தால், அவர்களது வாழ்வில் அது சமநிலையின்மையை உருவாக்கும் என்பதால், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய தந்தையின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "ஒரே நாடு ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்" - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.