தமிழ்நாடு

tamil nadu

கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் ரூ.648 கோடியில் பயோ மைனிங் திட்டம் - டெண்டர் வெளியீடு!

By

Published : Mar 23, 2023, 6:51 PM IST

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் சுமார் 648 கோடி ரூபாய் செலவில் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

corporation dumbyard
corporation dumbyard

சென்னை:சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் டன் குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகளவிலான குப்பைக் கழிவுகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும், பெருங்குடி குப்பைக் கிடங்கிலும் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றி பராமரிக்காததால், கிடங்குகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் செலவில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தேங்கியிருக்கும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்து அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் கையாளவும், கிடங்கை மறுசீரமைத்து நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றுவதற்காக 648 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசு நிதியாக 160 கோடி ரூபாய், மாநில அரசு நிதியாக 102 கோடி ரூபாய் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 378 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 648.83 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 251.9 ஏக்கர் பரப்பளவில் உள்ள 64,000 டன் குப்பைகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படவுள்ளது.

இதற்கான ஆன்லைன் டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தொகுப்பில் 204 கோடியே 22 லட்சம் ரூபாய், இரண்டாவது தொகுப்பில் 39 கோடியே 90 லட்சம் ரூபாய், மூன்றாவது தொகுப்பில் 109 கோடியே 97 லட்சம் ரூபாய், நான்காவது தொகுப்பில் 42 கோடியே 50 லட்சம் ரூபாய், ஐந்தாவது தொகுப்பில் 176 கோடியே 78 லட்சம் ரூபாய், ஆறாவது தொகுப்பில் 68 கோடியே 4 லட்சம் ரூபாய் என பிரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை tntender.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பெருங்குடி குப்பை கிடங்கில் ஒரு வருட காலத்தில் பயோ மைனிங் முறை மூலம் பல லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கரியமில வாயு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் மூலம் 7.50 லட்சம் டன் கார்பன் உமிழ்வு தடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details