தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 6 வருடமாக கஞ்சா சாக்லேட் விற்பனை.. பீகார் இளைஞர் சிக்கியது எப்படி?

By

Published : Mar 7, 2023, 9:54 AM IST

சென்னை அண்ணா சாலையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகள் விற்பனை செய்த பீகார் மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அண்ணாசாலை காவல்நிலைய போலீசார் தாராப்பூர் டவர் அருகே உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

அப்போது, அண்ணா சாலையில் அமைந்துள்ள தலப்பாகட்டி ஹோட்டல் அருகே உள்ள சாய் என்ற பான் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் உருண்டை என சொல்லக்கூடிய கஞ்சா உருண்டைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடையின் அருகே உள்ள குடோனில் சோதனை செய்தபோது சுமார் 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் நாலு கிலோ கஞ்சா உருண்டைகள் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பான் கடை என்ற பெயரில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கசரத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, பீகார் மாநிலத்திலிருந்து ரயில்கள் மற்றும் பிறவழி போக்குவரத்து மூலமாக இந்த கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா உருண்டைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை அல்போன்சாவின் சகோதரி வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி: அதிரடி கைது

மேலும், பீகார் மாநிலத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கஞ்சா சாக்லேட் இங்கு 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதேபோல ஒரு கஞ்சா உருண்டை ஒரு ரூபாய்க்குப் பீகாரில் விற்கப்படுவதை இங்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணா சாலையில் கடந்த ஆறு வருடமாக இந்த பான் கடையை நடத்தி வருவதாகவும் பிடிபட்ட நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த அண்ணா சாலையில் எந்தவித சத்தமுமின்றி சிறிய பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகளை கடந்த சில வருடங்களாக விற்பனை செய்து வந்த சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details