ETV Bharat / state

நடிகை அல்போன்சாவின் சகோதரி வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி: அதிரடி கைது

author img

By

Published : Mar 6, 2023, 10:58 PM IST

Updated : Mar 7, 2023, 9:26 AM IST

நடிகை அல்போன்சாவின் சகோதரி வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 80 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

Actress Alphonsas sister allegedly bought a job abroad And arrested
Actress Alphonsas sister allegedly bought a job abroad And arrested

சென்னை: நடிகை அல்போன்சாவின் சகோதரி வேலைவாய்ப்பு கன்சல்டென்சி நடத்தி கனடா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏராளமானவரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பத்து மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

திரைப்பட நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா வசந்த், பல ஆண்டுகளாக வளசரவாக்கத்தில் ஸ்பிளாஷ் கன்சல்டென்சி என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் மூலமாக சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் மரைன் என்ஜினியரிங் ஆகிய வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்த பலர் இவரிடம் நேரடியாக அணுகி, தங்களுடைய மகன் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருமாறு அணுகியுள்ளனர். அம்பத்தூரை சேர்ந்த அஷ்ரப் அகம்மது என்பவர் தன்னுடைய மகனுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதற்காக மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கடந்த 2019ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பணத்தைக் கொடுத்துள்ளார். 6 மாதம் கடந்தும் வேலை வாங்கித் தராததால், அது குறித்து கேட்டபோது பல்வேறு காரணங்களைக் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளனர்.

தொடர்ந்து பணத்தை கொடுத்தவர் பலரும் சோபாவை அணுகவே, உடனடியாக வளசரவாக்கத்தில் இருந்து தன்னுடைய அலுவலகத்தை நொளம்பூருக்கு யாரிடமும் சொல்லாமல் ஒரே இரவில் மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து ஷோபாவிடம் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட பலரும் சேர்ந்த ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைத்து, அவரை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இறுதியாக, நொளம்பூரில் அலுவலகத்தை நடத்தி வந்ததை கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மீண்டும் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்துள்ளார்.

இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைவருக்கும் சொன்னபடி வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும், வேறு வழி இல்லாமல் அவர் கூறியதை அரை மனதாக பணம் கொடுத்தவர்கள் நம்பியதாகவும், ஆனால் அவர் கூறியபடி மார்ச் மாதம் நொளம்பூர் அலுவலகத்திற்குச் சென்று பார்த்த போது, அந்த அலுவலகத்தையும் ஷோபா காலி செய்துவிட்டு செல்போன்களை சுவிட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவில் ஷோபா மீது அகமது அஷ்ரப் மோசடி புகாரினை அளித்துள்ளார். தொடர்ந்து அவரை கடந்த 10 மாதங்களாக தேடி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கேளம்பாக்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது தகவலை கேள்விப்பட்டு ஷோபாவால் ஏமாற்றப்பட்ட சுமார் 17 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏழு லட்சம் ரூபாயை ஷோபா பெற்று மோசடி செய்து விட்டதாக ரஜினி ராணா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இதே போல ஆவடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பி.டெக் படித்த தன்னுடைய மகனுக்கு கனடாவில் மூன்று லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

மொத்தமாக ஷோபா சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவித்துள்ளனர். அதன்படி ஷோபா மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொடர்ச்சியாக ஆடு திருடிய நபர் - டிடெக்டிவ் பாணியில் திருடனைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ஓனர்!

Last Updated :Mar 7, 2023, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.