தமிழ்நாடு

tamil nadu

7 தொன்மையான சாமி சிலைகளை ரூ. 5 கோடிக்கு விற்க முயற்சி - பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் கைது

By

Published : Feb 2, 2022, 6:01 PM IST

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர் எனக்கூறி சிலைகளைக் கடத்தி, பல கோடி ரூபாய்க்கு 7 தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி, இரண்டு காவலர்கள் உட்பட நான்கு பேரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது
கைது

சென்னை: ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் தொன்மை வாய்ந்த சிலைகளை சிலர் விற்க முயற்சிப்பதாக மதுரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தொன்மை வாய்ந்த சிலைகளை விற்க முயன்ற போது ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

தன்னிடம் ஏழு தொன்மை வாய்ந்த சிலைகள் இருப்பதாகவும் அதை ராமநாதபுரம், கூரிசேத்தனார் அய்யனார் கோயிலின் பின்புறம் உள்ள கால்வாயில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிலைகளை அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட தொன்மையான சாமி சிலைகள்

ரூ. 5 கோடிக்கு விற்க முயற்சி

இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவலர் இளங்குமரன் மற்றும் கருப்புசாமி ஆகியோரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாக நரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் சேலம் எடப்பாடி அருகே ஒரு மலை அடிவாரத்தின் கிராமத்தில் சிலைகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்றதாகவும், தாங்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர் எனக்கூறி அங்கிருந்த தொன்மையான ஏழு சிலைகளைப் கைப்பற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சிலைகளை பாஜக பிரமுகரான அலெக்சாண்டரிடம் கொடுத்து ரூ. 5 கோடிக்கு விற்க கூறியதும் தெரியவந்தது.

சிலைகளின் தொன்மை குறித்து விசாரணை

இதையடுத்து கால்வாயில் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1.5 அடி உயரமுள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரமுள்ள காளி சிலை, 3/4 அடி உயரமுள்ள முருகன் சிலை, 1/2 அடி உயர விநாயகர் சிலை, 1/2 நாக தேவதை சிலை ஆகிய 7 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஏழு சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது. சிலைகளின் தொன்மை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் கணேசன் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி விசைத்தறி உரிமையாளர்கள் 25ஆவது நாளாகப் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details