சென்னை:அறப்போர் இயக்கம் புகாரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்ய முகாந்திரம் உள்ளதாக திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளதாவது, “சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய்த் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் ஆவண எண் 4278/ 2022 மூலம் மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல் துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு 2023 ஏப்ரல் 12 ஆம் தேதி அனுப்பி இருந்தோம். இந்த புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர், ஆணை ந.க.எண்.725/உ/2023 நாள் 25.5.2023ன் மூலம் இராதாபுரம் சார்பதிவகம் 4278/2022 ஆனது ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளார்.
இது தற்பொழுது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் ஜூன் 13ஆம் தேதியன்று அறப்போர் இயக்கம் அளித்த புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு உள்துறை, சென்னை காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.