தமிழ்நாடு

tamil nadu

"புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 3:14 PM IST

Anbumani Ramadoss: புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக அச்சிட்டு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

புதிய மின்னணு குடும்ப அட்டை
அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால், புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக அச்சிட்டு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. குடும்ப அட்டை மிக மிக அவசியமானது என்பது மட்டுமின்றி, அது தான் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான அடிப்படை ஆவணம் ஆகும். அத்தகைய, அத்தியாவசிய ஆவணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தேவையற்ற காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்குவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன என்பதால், குடும்ப அட்டை கோருவோரின் விவரங்களை மிகவும் எளிதாக சரிபார்க்க முடியும். அவர்களுக்கு, வேறு ஏதேனும் இடங்களில் குடும்ப அட்டைகள் இருந்தால் அதையும் கண்டுபிடித்து விட முடியும். இந்த வசதிகளைப் பயன்படுத்தி 2021 மே மாதம் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 13 லட்சத்து 87 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரின் விவரங்களும் சரி பார்க்கப்பட்டு, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன. அவர்களின் பெரும்பான்மையினருக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அரசு நினைத்தால் ஒரு வாரத்தில் புதிய குடும்ப அட்டைகளை அச்சிட்டு மக்களுக்கு வழங்கி விடலாம். ஆனால், அதை செய்யாமல் தேவையில்லாத காலதாமதம் செய்வது ஏன்?

மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும். ஆனால், புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவிப்பை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது தான் உண்மை என்றால் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது. குடும்ப அட்டைகள் அனைவரின் உரிமை. அதை அரசு மறுக்கக் கூடாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்".

இதையும் படிங்க:திருநெல்வேலி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details