தமிழ்நாடு

tamil nadu

அரசியல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் வாகனம்..! கேப்டன் விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 2:00 PM IST

Actor Vijayakanth: திரையுலகில் கமல், ரஜினி என பெரும் நட்சத்திரங்கள் கோலோச்சிய காலத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்து அரசியலிலும் மக்கள் மனதிலும் முக்கிய இடம் பிடித்த விஜயகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

actor Vijayakanth interesting facts in Tamil
விஜயகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (டிச.28) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டதால், அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71 (1952 - 2023) ஆகும்.

கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் தலைவர், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

90களில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகர் விஜயகாந்த், அரசியலில் கால்பதித்து எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தார். வெற்றிப்படங்களுக்காக ரஜினி, கமல் போன்ற முன்னனி நடிகர்களை நோக்கி இயக்குநர்கள் படையெடுத்த காலகட்டத்தில், வளரும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். தான் கால்பதித்த இடமெல்லாம் வெற்றி கண்ட அரசியலிலும் வெற்றிவாகை சூடியவர்.

முன்னணி நடிகர்களுக்கே 100வது படங்கள் கைவிட்ட போது, விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் பின்னர் நடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் விஜயகாந்த் என்ற அடைமொழி சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அனைவராலும் நடிகர் விஜயகாந்தாக இருந்த அவர் கேப்டன் விஜயகாந்தாக மாறினார். தனது படங்கள் மூலமும் அரசியலிலும் புரட்சி செய்த விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.

கேப்டன் விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்;

  • நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு செங்கல்பட்டு அருகே பொறியியல் கல்லூரியும், சென்னை கோயம்பேட்டில் ஒரு திருமண மண்டபமும் உள்ளது.
  • கார்கில் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
  • ஆண்டுதோறும் லிட்டில் ஃப்ளவர் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக அளித்து வருகிறார். மேலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவுவதுடன், அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் தனது பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கவும் வைத்துள்ளார்.
  • ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று, ஏழை எளிய மக்களுக்குத் தையல் மிஷின், மூன்று சக்கரவண்டி, அயன் பாக்ஸ், இட்லி பாத்திரங்கள் போன்றவற்றை வழங்குவார்.
  • தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய வேனை, எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் விஜயகாந்துக்கு வழங்கினார்.
  • விஜயகாந்த் தெலுங்கு படங்களில் நேரடியாக நடிக்கவில்லை என்றாலும், அவரது பல படங்கள் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • விஜயகாந்துக்கு ஆக்‌ஷன் படங்கள் பார்ப்பது, கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு ஆகும்.
  • எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் விஜயகாந்தின் இன்ஸ்பிரேஷன் ஆவார்கள்.
  • நடிகர் விஜயகாந்த் கோலிவுட் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றை நாட்டிலேயே சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு முக்கிய பங்கு வகித்தவர்.
  • தனது திரையுலக வாழ்க்கை முழுவதையும் தமிழ் படங்களுக்காக மட்டுமே அர்ப்பணித்தவர்.
  • முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சினிமா தொழில்துறையை ஆளுகின்ற நேரத்திலும், தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த்.
  • 1970ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான விஜயகாந்த், அப்படத்தில் வில்லனாக நடித்தார்.
  • விஜயகாந்த் நடிப்பில் 1980இல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமாவிற்கு தேர்வு செய்யப்பட்டது.
  • 90களில் விஜயகாந்தின் நடிப்பில் தேசபக்தியை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மறைந்தார் மக்களின் நாயகன் விஜயகாந்த்.. கடந்து வந்த பாதை..!

ABOUT THE AUTHOR

...view details