தமிழ்நாடு

tamil nadu

"பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்"

By

Published : Mar 29, 2023, 8:01 PM IST

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைய நேர்ந்தால், வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்தொகை 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

assembly
தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.29) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 2023-24ஆம் ஆண்டுக்கான 14 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வி. கணேசன் வெளியிட்டார். அவையாவன:-

  • அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மூக்கு கண்ணாடி உதவித்தொகை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், சுமார் 550 பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறுவார்கள்.
  • 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு 25 ஆயிரம் ரூபாயும், பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு 50,000 ரூபாயும் ஊக்க உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தகுதியின் அடிப்படையில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெறும்பொழுது கல்விக் கட்டணம், தங்கும் விடுதி முழுக் கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் 50,000 ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைய நேர்ந்தால், தற்போது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்தொகை 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் நிதி உதவி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தீவிர நோய்ப் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையாக ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்றாண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பணியின்போது விபத்து மரணம் அடைய நேர்ந்தால் 5 லட்சம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டொன்றுக்கு 4,000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தச்சர், கொத்தனார், கம்பி வளைப்பவர், பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் ஆகிய கட்டுமானப் பணிகளில் புதிதாக ஈடுபட்டு வரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் நபர்களுக்கு திறன் பயிற்சி ஆகியவை 4.74 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் அளிக்கப்படும்.
  • 1950, 1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 27 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 18.70 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
  • 25 லட்சம் ரூபாய் செலவில் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களின் திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.
  • கட்டுமானப் பணியிடங்களில் பாதுகாப்பாகப் பணிபுரிவது தொடர்பான காணொலி காட்சிகள் 30 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 லட்சம் ரூபாய் செலவில் குறும்படம் தயாரித்து வெளியிடப்படும்.
  • தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் செயல்படும் தொழில் சுகாதார ஆய்வகம் மேம்படுத்தப்படும் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும். இவற்றிற்காக ரூ.19.50 லட்சம் செலவிடப்படும்.
  • அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் மயக்க மருந்தியல் காது, மூக்கு, தொண்டை மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவமாகிய பிரிவுகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நிகரான 2 ஆண்டு பட்டப் படிப்புகள் 1.23 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details