ETV Bharat / state

பெற்றோரை இழந்து அமெரிக்காவில் தவிக்கும் 2 வயது சிறுவனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை!

author img

By

Published : Mar 29, 2023, 2:33 PM IST

பெற்றோர் இறந்த நிலையில், அமெரிக்காவில் தவித்து வரும் 2 வயது இந்திய சிறுவனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசுத் தரப்பிலிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

govt
அரசு

சென்னை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் மிசிசிப்பியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களது உடல் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தம்பதி இறந்த நிலையில், அவர்களது இரண்டு வயது ஆண் குழந்தை அமெரிக்காவில் தனித்து விடப்பட்டது. அக்குழந்தை அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால், அந்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தம்பதியினரின் பக்கத்து வீட்டுக்காரர் சிறுவனை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் சிறுவனின் தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவினர்கள் அவனை மீட்க முயற்சித்து வருகின்றனர். சிறுவனின் பெற்றோர் இறந்தது முதலே இவர்கள் சிறுவனை மீட்கப் போராடி வருகின்றனர். சிறுவன் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால் மீட்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. இந்த விஷயம் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சிறுவனை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவனை மீட்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தூதரக உதவியுடன் சிறுவனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்.. சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.