தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி மாணவர்களே குறி! சென்னையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

By

Published : Jul 11, 2023, 11:07 PM IST

சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது: 5 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல்!
பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது: 5 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த கும்பலை மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று (ஜூலை 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மாலதி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு வடமாநில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை திறந்து சோதனையிட்டதில், அதில் 30 கிலோ கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; 9 பேர் கைது

பின் அவர்களிடம் நடத்திய விசாரனையில் அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சைமன் டிப்பர்மா(32), சஞ்சு டிப்பர்மா(27), ஜெமிஷ் டிப்பர்மா(22), சுரஜ் டிப்பர்மா(32) என்பது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் பல்லாவரம் பகுதிகளில் உள்ள சாலையோர டீ கடைகள், உணவகங்களில் வேலை செய்துகொண்டே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பும் போதெல்லாம், நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வராமல், அங்கிருந்து பெங்களூர் வந்து இறங்கிய பின்னர், அங்கு முன்னரே ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து பதுக்கிய கஞ்சாவை, பண்டல் பண்டலாக பிரித்து அங்கிருந்து மீண்டும் ரயிலில் சென்னை பல்லாவரம் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: தென்காசி சட்டப்பேரவைத்தேர்தல்.. தபால் வாக்கு குளறுபடி... மீண்டும் எண்ணத் தயாரான மையம்!

இவ்வாறு கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கனல் கண்ணன் கைது; பேருந்து நிறுத்தப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details