தமிழ்நாடு

tamil nadu

அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி - 4 பேர் கைது

By

Published : Mar 7, 2022, 7:06 AM IST

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்தவர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.

அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்த நபர்கள் கைது
அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்த நபர்கள் கைது

சென்னை: கோட்டூர்புரத்தை சேர்ந்த அமுதா உள்ளிட்டோர் தங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 3 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தனர்.

100க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி

இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு நன்மங்கலமத்தை சேர்ந்த ரேணுகா(48) என்பவரைச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ரேணுகா கூட்டாளிகளுடன் சேர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் ரேணுகா உயரலுவலராக உள்ளது போன்று போலி அடையாள அட்டையைத் தயார் செய்து வைத்துக் கொண்டு வேலை தேடும் அப்பாவி இளைஞர்களிடம் போலி அட்டையை காண்பித்து ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்துள்ளதும் தெரியவந்ததுள்ளது.

மோசடி ஆசாமிகள் கைது

இதையடுத்து ரேணுகாவின் கூட்டாளிகளான சைதாப்பேட்டையைச் சேர்ந்த காந்தி(54), நெற்குன்றத்தை சேர்ந்த மோகன்ராஜ் (32), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(33), ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் கூட்டாக சேர்ந்து படித்த இளைஞர்களிடம் இருந்து மூன்று கோடிக்கும் மேல் பணம் பெற்று அவர்களிடம் அசல் கல்வி சான்றிதழ் பெற்றுக்கொண்டு கே.எம்.சி மருத்துவமனையில் வைத்து போலியாக மருத்துவ பரிசோதனை நடத்தி போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போலியான பணி நியமன ஆணைகள், போலியான அடையாள அட்டைகள், படித்த இளைஞர்களின் சுமார் 70 அசல் கல்வி சான்றிதழ், மோசடி பணத்தில் வாங்கிய 40 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனம், தங்க நகைகள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மோசடி செயலுக்கு பயன்படுத்திய 10 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து ரூபாய் 5 லட்சம் பணம் கைப்பற்றினர். இதையடுத்து நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details