தமிழ்நாடு

tamil nadu

'எல்லா ஊரும் எங்க ஊர்தான் பாஸ்: பேருந்தில் உலகை சுற்றும் ஜெர்மன் தம்பதி'

By

Published : Feb 23, 2023, 10:49 PM IST

பேருந்தையே வீடாக மாற்றி அமைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் சுற்றுலா வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'காய்’ குடும்பத்தினர் மாமல்லபுரம் வருகை தந்தனர்.

'எல்லா ஊரும் எங்க ஊர்தான் பாஸ்: பேருந்தில் உலகை சுற்றும் ஜெர்மன் தம்பதி'
'எல்லா ஊரும் எங்க ஊர்தான் பாஸ்: பேருந்தில் உலகை சுற்றும் ஜெர்மன் தம்பதி'

'எல்லா ஊரும் எங்க ஊர்தான் பாஸ்: பேருந்தில் உலகை சுற்றும் ஜெர்மன் தம்பதி'

செங்கல்பட்டு: ஜெர்மன் நாட்டின், பெர்லின் நகரைச் சேர்ந்த காய்(45), இவரது மனைவி நீனா(44) தம்பதி. இவர்களுக்கு பென்(12) என்ற மகனும், லெனி(10) என்ற மகளும் உள்ளனர். காய் என்பவர் தொழில் நிமித்தமாக துபாயில் குடியேறினார் எனக் கூறுகின்றனர்.

கணவன் மனைவி இருவரும் அங்குள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். துபாயில் உள்ள பள்ளியில் மகன் பென் 7-ம் வகுப்பும், மகள் லெனி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழ்ந்து முடிக்காமல், வித்தியாசமாக வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்ட இத்தம்பதியினர் சுற்றுலாவில் ஆர்வம் மிக்கவர்கள் ஆவார். எனவே, சொகுசுப் பேருந்து ஒன்று தயார் செய்து உலகம் முழுவதும் சுற்றி வர ஆசைப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, துபாயில் ஒரு பேருந்தை வாங்கி, அதில் சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை , ஏ.சி., டி.வி., பிரிஜ் வசதிகள் கொண்ட ஒரு சொகுசு வீடாக மாற்றியமைத்தனர்.

பின்னர், இவர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி தங்கள் சொகுசுப் பேருந்து மற்றும் வீடு மூலம் உல்லாசப் பயணம் துபாயில் தொடங்கினர். இதையடுத்து ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று சுற்றியவர்கள், 200 நாட்களைக் கடந்து சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் வாகா எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தனர்.

இந்தியாவில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, சொகுசு வீடு பேருந்தில் நேற்று தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்திற்கு வந்தனர். இந்தியப் பயணத்தை முடித்துவிட்டு நேபாளம், மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகள் வழியாகச் சென்று, அமெரிக்காவில் தங்கள் சொகுசு வீடு பேருந்து பயணத்தை நிறைவு செய்யவிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

கடற்போக்குவரத்து வசதியுள்ள நாடுகளுக்கு சிறப்பு விசா பெற்று கப்பல் மூலம் இந்த வாகனத்தை எடுத்து செல்லும் இந்தத் தம்பதியினர். அதன்பின் அந்நாடுகளில் சாலை மார்க்கமாக இந்த வாகனத்தில் சுற்றி வருகின்றனர்‌. கூடுதல் சுவாரஸ்யமாக, இவர்களது மகன் பென், மகள் லெனி இருவரும் தங்கள் படிப்பு கெடாமல், தினமும் 6 மணி நேரம் ஆன்லைன் மூலமாகப் பயில்கின்றனர்.

இந்தப் பேருந்தை காய் தம்பதியினர் இதுவரை 22 ஆயிரம் கி.மீ.ஓட்டி வந்துள்ளனர். மாமல்லபுரம் வந்த காயும், அவரது மனைவியும் சாலையில் அந்த சொகுசுப் பேருந்தை நிறுத்திவிட்டுச் சுற்றி பார்க்கச் சென்றபோது, பொதுமக்கள் பலர் அந்த நவீன சொகுசு வாகனத்தை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர். பேருந்தில் சோலார் வசதி பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் மின்சார வசதி பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன இயந்திரம், குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:அடேங்கப்பா! ஜெயிலில் சொகுசு வாழ்க்கை: சுகேஷின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காலணிகள், ரூ.80,000 ஜீன்ஸ் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details