தமிழ்நாடு

tamil nadu

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. மின்சார ரயில் சேவை பாதிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 9:09 AM IST

Updated : Dec 11, 2023, 10:36 AM IST

chengalpattu Goods train accident: செங்கல்பட்டு - பரனூர் இடையே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

A goods train derailed near Chengalpattu Tamil Nadu earlier today
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே இரவு 12 மணி அளவில் வந்தபோது அந்த சரக்கு ரயில் தடம்புரண்டது.

சரக்கு ரயில் தடம்புரண்ட தகவல் கிடைத்ததும் விழுப்புரம் - செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து வந்த மீட்புக்குழுவினர் ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், செங்கல்பட்டு பகுதியில் இருந்த சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரியில் இருந்தே இயக்கப்படுகின்றன. அதே போல் சென்னையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதனால், இன்று காலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வோரும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், திருமால்பூர் - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை உள்ளிட்ட புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

சரக்கு ரயில் தடம்புரண்டதன் காரணமாக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பணிக்கு செல்லும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், புயல் பாதிப்பு காரணமாக நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரயிலில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவது குறித்து முன்னரே ரயில்வே நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரும்பு பொருட்களை ஏற்றி வந்த இந்த சரக்கு ரயிலில் 10 பெட்டிகள் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.

இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

Last Updated : Dec 11, 2023, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details