ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 7:26 AM IST

Updated : Dec 11, 2023, 10:13 AM IST

Chennai flood vehicle repair Centre: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதிரி பாகங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் பழுது நீக்க தமிழக அரசு இலவச முகாம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "மழையால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதுநீக்க வசதியாக, பழுதுநீக்கும் மையங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் மீட்பு வாகனங்கள் மூலம் பழுதுநீக்கும் மையங்களுக்கு எடுத்து வர வேண்டும். வாகன தயாரிப்பு, காப்பீடு நிறுவனங்கள் சாா்பில் டிச.18ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வாகன பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு பிற மாவட்டங்களில் இருந்து தொழில்நுட்பப் பணியாளா்கள் அழைத்து வரப்பட்டுள்ளனா். வெளிமாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூா், ஜொ்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் உதிரி பாகங்களைக் கொண்டு வரவும் போா்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான பாதிப்புள்ள வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படுகின்றன. பழுது நீக்கும் மையங்களில் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுக்கின்றனா். வாகனங்களைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கட்டணமின்றி மீட்பு வாகனங்கள் மூலம் எடுத்து வருவதற்கான நடவடிக்கையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை(டிச.9) வரை 3,433 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் மீட்புப் பணிக்காக வாகனங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள், முகவா்கள், காப்பீட்டு நிறுவனங்கள் முகாம் நடத்துவதற்கான இடங்களை வழங்கவும் அரசு தயாராக உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

நிறுவனங்கள் அறிவித்த இலவச உதவி எண்கள்:

  • ராயல் என்பீல்டு - 1800 2100 007
  • ஹோண்டா - 1800 1033 434
  • டிவிஎஸ் - 1800 2587 555
  • கியா மோட்டாா்ஸ் - 1800 1085 000
  • ஹுண்டாய் - 1800 1024 645
  • டாடா மோட்டாா்ஸ் - 1800 209 8282
  • மாருதி சுசுகி - 1800 1800 180
  • யமஹா - 1800 4201 600
  • சுசுகி - 1800 1217 996
  • டொயோடா - 1800 1020 909

இதையும் படிங்க: வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்?

Last Updated :Dec 11, 2023, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.