தமிழ்நாடு

tamil nadu

அரியலூர் அருகே அச்சத்துடன் பயிலும் பள்ளி மாணவர்கள்.. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பெற்றோர் வேண்டுகோள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 11:18 AM IST

Ariyalur news: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி, பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய கட்டடம் கோரி மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்
பழுதடைந்த பள்ளி கட்டடம்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி

அரியலூர்:அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடிக்காமலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரே கட்டடத்தில் செயல்படும் இப்பள்ளியானது, கட்டப்பட்டு பல ஆண்டுகள் உள்ள நிலையில், பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.

பழமையான கட்டடம் என்பதால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பழுது ஏற்பட்டு, கான்கிரீட் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, சிமெண்ட் கற்கள் பெயர்ந்து மாணவர்கள் மீது விழும் அபாய நிலையும் இருந்துள்ளது. மேலும், பள்ளி கட்டட வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல், பள்ளி கட்டட வளாக சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் சரிந்து கீழே விழும் நிலையில் இருந்து வருகிறது. இதனால், தினந்தோறும் மாணவர்கள் அச்சத்தோடு பள்ளி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பழுதடைந்துள்ள பள்ளி கட்டடத்தை மாற்றி, புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது மழைக்காலம் என்பதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முறையான சாலை வசதியும் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தோடு சென்று வரும் சூழ்நிலை உள்ளது.

இது குறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் என பல தரப்பில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் கனமழை பெய்ததால், பள்ளிக்கு வந்த பெற்றோர் மதிய உணவு முடியும் வரை காத்திருந்து, மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், பழுதடைந்த பள்ளி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும், ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளியின் முன்பு பெற்றோர் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்கள் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்படும் என அரசுக்கு எச்சரித்தனர். பள்ளி கட்டடத்தை மாற்றும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்து, அங்கிருந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் - இரண்டு பெண்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details