அரியலூர்:தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி உரிய விதிமுறைகளுடன் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்களில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மாதத்தில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 11) காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கின. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போட்டியில் 621 காளைகளை பிடிக்க 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதோடு ஜல்லிக்கட்டுப் போட்டியினை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் படி முறையாக நடத்தி முடிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.
வாடி வாசலுக்கு மேல்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்து அமைச்சர் சிவசங்கர், ஜல்லிக்கட்டு தொடர்பான பாதுகாப்பு உறுதி மொழியை முதலில் வாசித்தார். அந்த உறுதிமொழியை மாடு பிடி வீரர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பொதுமக்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து அமைச்சர் சிவசங்கர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் முகப்பு கேட் திறக்கப்பட்டு காளைகள் ஒவ்வொன்றாக சீறிப்பாய்ந்து களத்துக்கு வந்தன. மஞ்சள் சீருடையில் அணிவகுத்த மாடுபிடி வீரர்கள் சீறி வந்த காளைகளை பாய்ந்து பிடித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.