தமிழ்நாடு

tamil nadu

PARALYMPIC SHOOTING: இறுதிச்சுற்றில் ரூபினா ஃபிரான்சிஸ் ஏமாற்றம்

By

Published : Aug 31, 2021, 12:36 PM IST

பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றமளித்தார்.

ரூபினா ஃபிரான்சிஸ், Rubina Francis, PARALYMPIC SHOOTING,
ரூபினா ஃபிரான்சிஸ்

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்று போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் உள்பட எட்டு வீரர்கள் பங்கேற்றனர். ரூபினா, முதல் சுற்றில் 93.1 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருந்தார்.

இதன்பின் நடந்த எலிமினேஷன் சுற்றில், குறைவான புள்ளிகளைப் பெற்று அந்தச் சுற்றோடு போட்டியிலிருந்து வெளியேறினார். முன்னதாக, நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் ரூபினா ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

மேலும், இப்போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சாரே ஜாவன்மார்டி (Sareh Javanmardi) தங்கம் வென்றதோடு புதிய உலகச் சாதனையையும் படைத்துள்ளார்.

சிறுவயது ஆர்வம்

22 வயதான ரூபினா ஃபிரான்சிஸ், கால்கள் செயலிழப்போடு பிறந்துள்ளார். கல்வி அல்லாமல் பிற துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ரூபினாவிடம் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்துள்ளது.

இந்நிலையில், ரூபினா பயின்றுவந்த பள்ளியில் 'ககன் நரங் துப்பாக்கிச்சுடுதல் அகாதமி'விளம்பரம் ஒன்றை செய்துள்ளது. அதைக்கண்ட ரூபினா அந்த அகாதமியில் 2015ஆம் ஆண்டு சேர்ந்து பயிற்சிப்பெற்ற நிலையில், தனது அடுத்தக்கட்ட பயிற்சிக்காக 2017ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச துப்பாக்கிச்சுடுதல் அகாதமியில் இணைந்தார்.

சர்வதேச அரங்கில் ரூபினா

இதையடுத்து, 2017ஆம் ஆண்டில் முதன்முறையாக சர்வதேச தொடரில் பங்கேற்றார். அடுத்து, 2018ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற பாரா துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பைத் தொடரிலும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

கரோனா - தங்கம்

ரூபினா, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற தனது பயிற்சியாளர் சுபாஷ் ராணாவுடன் மிகவும் கடினமாகப் பயிற்சி எடுத்துவந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளானார்.

பாரா ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற வேண்டுமானால், பெரு தலைநகர் லிமாவில் நடைபெறும் உலகத் துப்பாக்கிச்சுடுதல் பாரா விளையாட்டு உலகக்கோப்பைத் தொடரில் கண்டிப்பாகப் பதக்கம் வெல்ல வேண்டும்.

இந்தத் தொடர் ஜூன் மாதம் நடைபெற்றது. கரோனாவிலிருந்து மீண்ட ஒரே மாதத்தில், இத்தொடரில் பங்கேற்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவில் தங்கம் வென்று, ரூபினா ஃபிரான்சிஸ் அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!

ABOUT THE AUTHOR

...view details