தமிழ்நாடு

tamil nadu

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை

By

Published : Jun 9, 2019, 1:08 PM IST

பாரீஸ்: பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

ashley barty

உலகின் தலைசிறந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் மே 20ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.

இந்தத் தொடரில் புதுமுக இளம் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நவோமி ஒசாகா, செரீனா வில்லியம்ஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் காலிறுதிச்சுற்றுக்கு முந்தைய போட்டிகளிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.

இந்நிலையில், இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிரெஞ்சு ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெற்ற உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வொன்ரோசோவாவை ஆகியோர் மோதினர்.

பந்தை அடிக்கும் ஆஷ்லி

இப்போட்டியில் ஆஷ்லி முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-3 எனக் கைப்பற்றியதன் மூலம், செக் வீராங்னையை வீழ்த்தி அவர் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் என்னும் தடத்தை பதித்தார். இப்போட்டி 70 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

பிரெஞ்சு ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய ஆஷ்லி, 46 வருடங்களுக்கு பின்னர் இந்தப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக 1973ஆம் ஆண்டு டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கெரட் கோர்ட் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

கோப்பையுடன் உற்சாகமாக இருக்கும் ஆஷ்லி பார்ட்டி

ஆஷ்லி பார்ட்டி, முன்னதாக கிரிக்கெட் வீராங்கனையாக செயல்பட்டுள்ளார் என்பதே இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும். ஆம் 2014ஆம் ஆண்டில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகிய ஆஷ்லி, அதன்பின்பு இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிக்காக மகளிர் டி20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார்.

அதன் பிறகு 2016ஆம் ஆண்டில் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பிய ஆஷ்லி முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். அவர் தற்போதைய வெற்றியின் மூலம் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details