தமிழ்நாடு

tamil nadu

T20 WORLDCUP: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா

By

Published : Nov 4, 2021, 7:22 AM IST

ஆப்கானிஸ்தானை சூறையாடிய இந்தியா

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

அபுதாபி: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் - 12 சுற்றுப்போட்டிகள் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று (நவ. 3) மோதின.

அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஜோடி மிரட்டலான தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 140 ரன்கள் குவித்தபோது, ரோஹித் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிரட்டிய ராகுல் - ரோஹித்

இதையடுத்து, சற்றுநேரத்தில் கே.எல். ராகுலும் 69 ரன்களில் வெளியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த பந்த் - ஹர்திக் ஆகியோர் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்ட இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 210 ரன்கள் குவித்தது.

ரிஷப் பந்த் 27 (13) ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 35 (13) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் பந்துவீச்சில் குல்பதீன், கரீம் ஜனட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அஸ்வின் - ஜடேஜா சுழல் ஜாலம்

211 ரன்கள் என்ற இமலாய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சஷாத் 0, ஷஷாய் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பவர்பிளே ஓவர்களில் குர்பாஸ் சற்று அதிரடி காட்ட, பவர்பிளேயில் ஆப்கன் 47 ரன்களை குவித்தது.

இதன்பின், ஜடேஜா, அஸ்வின் கூட்டணி ரன் வேகத்தை கட்டுப்படுத்த, ஆப்கன் பேட்டர்கள் மீதான அழுத்தம் அதிகமாகியது. இதனால், குர்பாஸ் 19, குல்புதீன் 18, நஜிபுல்லா 11 என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

என்றாலும், கேப்டன் நபி, கரீம் ஜனத் ஜோடி தங்களது விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடினர். பின்னர், ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் நபி, ரஷித் கான் ஆட்டமிழந்தனர்.

நெட் ரன்ரேட் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுக்க, இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. அதிகபட்சமாக ஜனத் 42 ரன்களையும், நபி 35 ரன்களையும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடியாக விளையாடி 74 ரன்களை எடுத்த ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மட்டுமில்லாமல், நெட் ரன்ரேட்டையும் அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details