தமிழ்நாடு

tamil nadu

INDIA'S T20 SQUAD: கேப்டனாகும் ரோஹித்; துணைக்கு ராகுல்!

By

Published : Nov 9, 2021, 10:42 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல். ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

kl rahul, கே.எல்.ராகுல், rohit rahul, rohit sharma, kl rahul
INDIA'S T20 SQUAD

மும்பை:ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது ஐசிசி டி20 உலக்கோப்பைத் தொடர் வரும் நவ. 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இத்தொடரில், நேற்றுடன் (நவ. 8) சூப்பர் - 12 சுற்றுகள் முடிந்த நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் - 12 சுற்றோடு இந்திய அணி வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பைத் தொடர் முடிந்த கையோடு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.

ரோஹித் சர்மா

டைம் டூ லீட்

முன்னதாக, உலகக்கோப்பைத் தொடரோடு டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதனால், இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக யார் பொறுப்பிற்கு வர உள்ளார் என அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (நவ. 9) அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு முறையே கேப்டன், துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மன்னர்களுக்கு வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட், இந்திய ஆடவர் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், புதிய அணியை கட்டமைக்கும் பணி நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வில் இருந்தே தொடங்கியுள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய 'ஏ' அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிரியங்க் பஞ்சல் கேப்டனாக செயல்படும் இந்த அணியில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், பாபா அபாராஜித், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, உம்ரன் மாலிக், இஷான் போரேல் என இளம் பட்டாளங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய 'ஏ' அணி, தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளை (நான்கு நாள் போட்டி) விளையாட உள்ளது.

இந்திய அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

இதையும் படிங்க: T20 WORLDCUP: ஐபிஎல் தொடரால் தப்பித்தேன் - வில்லியம்சன் வெளிப்படை

ABOUT THE AUTHOR

...view details