தமிழ்நாடு

tamil nadu

"இந்தியா போன்ற சிறந்த அணியிடம் தோற்றது மகிழ்ச்சி" - கேன் வில்லியம்சன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 4:44 PM IST

World Cup Cricket Kane Wiilamson : நாக் அவுட் சுற்றில் அடைந்த தோல்வி வருத்தம் அளித்தாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்து உள்ளார்.

Kane Williamson
Kane Williamson

மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவ. 15) நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. விராட் கோலி (117ரன்), ஸரேயாஸ் ஐயர் (105 ரன்) ஆகியோர் அபாரமாக சதம் விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

அடுத்து 398 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (13 ரன்), டிவென் கான்வாய் (13 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தனர்.

சதம் விளாசிய டேரி மிட்செல் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் கொண்டு சென்றார். இந்த நேரத்தில் அபாரமாக செயல்பட்டு பந்துவீசிய முகமது ஷமி நியூசிலாந்து அணியின் முக்கிய 7 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து ஆட்டத்தை இந்திய அணி பக்கம் கொண்டு வந்து வெற்றி பெறச் செய்தார்.

48 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இந்திய அணி பிரமாதமாக விளையாடியதாகவும் சிறந்த அணியிடம் தோல்வியை தழுவி உள்ளதாகவும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்து உள்ளார்.

தோல்விக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "முதலில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே அரைஇறுதி ஆட்டத்திலும் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் மீண்டும் நிரூபித்துள்ளது. உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம். இருப்பினும், நாங்கள் இன்றைய போட்டியில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்தது வருத்தம் அளித்தாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் மிகச் சிறப்பாக ஆதரவளித்தனர். ஆனாலும் ரசிகர்கள் இந்திய அணிக்காக மட்டுமே ஒருதலை பட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். இருந்தாலும் இங்கு இவ்வளவு பேர் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச் சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரி மிட்செல் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுலர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம்" என்று கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :South Africa Vs Australia : மழையால் ஆட்டம் பாதிப்பு! தென் ஆப்பிரிக்கா திணறல்!

ABOUT THE AUTHOR

...view details