தமிழ்நாடு

tamil nadu

KKR vs LSG: நூலிழையில் கோட்டைவிட்ட கொல்கத்தா... 1 ரன்னில் பிளே ஆப் சுற்றில் நுழைந்த லக்னோ...

By

Published : May 20, 2023, 7:33 PM IST

Updated : May 21, 2023, 7:14 AM IST

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

Today ipl
இன்றைய ஐபிஎல்

கொல்கத்தா: 16வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற 68வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கரண் சர்மா களம் இறங்கினர்.

துவக்க ஆட்டக்காரர் கரண் சர்மா வெறும் மூன்று ரன்னில் ஆட்டம் இழந்து துவக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார். பிரேரக் மன்கட் அடுத்த வீரராக களமிறங்கி டி காக் உடன் கை கோர்த்தார். சிறிது நேரம் நிலைத்து இருந்த இந்த ஜோடி பிரேரக் மன்கட் 20 பந்தில் 26 ரன் எடுத்து அவுட் ஆக பிரிந்தது. அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் ரன் எதுவுமின்றி அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் குர்னால் பாண்டியா 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். நீண்ட நேரம் களத்தில் நின்ற டி காக் 28 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்ததால் அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை. இந்நிலையில் ஆயுஷ் பதோனியும் - நிகோலஸ் பூரனும் கைகோர்த்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

ஆயுஷ் பதோனி 25 ரன்னில் அவுட் ஆன நிலையில், அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 30 பந்தில் 58 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கிருஷ்ணப்பா கவுதம் 4 பந்துகளில் 11 ரன் சேர்த்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் சேர்த்தது.

177 ரன் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினர். வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 24 ரன் சேர்த்து ஆவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 28 பந்தில் 45 ரன் சேர்த்த நிலையில் குர்னால் பாண்டியா வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில் ரிங்கு சிங் தனி ஆளாக போராடி அரை சதத்தைக் கடந்தார்.

இறுதியில் ரிங்கு சிங் 33 பந்தில் 67 ரன்களுடனும், வைபர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் சேர்த்தது. இதன் மூலம் லக்னோ 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி வீரர் நிகோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு 3-ஆவது அணியாக தகுதி பெற்றது.

இதையும் படிங்க: DC vs CSK: 'சென்னை அணிக்கு விசில் போடு'... பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!

Last Updated : May 21, 2023, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details