யாழ்ப்பாணம்: இலங்கையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ உட்பட 38 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். மேலும் வேட்பாளர்கள் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போதைய அதிபரும் சுயேச்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க. ஏற்கனவே 1999 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் அதிபர் தேர்தலில் நின்று தோல்வியை தழுவியுள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இடைக்கால அதிபராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர் அதிபர் தேர்தலில் இம்முறை சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது கவனம் பெற்றுள்ளது.
கடும் போட்டியில் உள்ள 6 வேட்பாளர்கள்: இந்த முறை தேர்தலில் போட்டியிடும் முக்கிய 6 வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி காணப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர்: அதிபர் பதவிக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர். இலங்கையில் அதிபர் தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சூழலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் வாக்கு யாருக்கு என்பதை ஈடிவி பாரத் தமிழ் நேரடியாக அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டுள்ளது.
தமிழ் மக்களின் எண்ணம்: உள்நாட்டு யுத்தம் நிறைவு பெற்று 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என தமிழர்கள் குற்றம் சாட்டினர். மேலும், யார் இலங்கையின் அதிபராக வந்தாலும் தமிழர்களை கண்டு கொள்வதில்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் களத்துக்கு வரும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் எதுவும் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு அதிகாரிகளால் உயிர் தப்பினார்.. கமலா ஹாரிஸ் கூறிய விளக்கம் என்ன?
பொருளாதார நெருக்கடிக்கு பிறகு தற்போது வாழ்க்கைச் சூழல் கடுமையாக பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு விலையேற்றம் கண்டுள்ளது. நாட்டில் தற்போது அதிகரித்துள்ள விலைவாசியை கட்டுப்படுத்தி வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வசதிகளை உருவாக்கித் தர முன் வரும் வேட்பாளருக்கே வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த அவருக்கு வாக்களிக்க உள்ளதாக பலர் தெரிவித்தனர். அதேவேளை யாருக்கு ஆதரவு என்ற விவகாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பலர் சஜித் பிரேமதாசாவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எம் பி செல்வராஜ் கஜேந்திரனின் கருத்து: இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரன் கூறுகையில், "இலங்கையில் 75 வருடங்களாக தமிழர்கள் சந்தித்து வரும் இன ஒழிப்பு முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதுவரை யாரும் வாக்குறுதிகள் அளிக்கவில்லை. இனவாத கொள்கையை முன்வைத்து மூன்று போட்டியாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இனவாத மோதலுக்கான காரணம்: சிங்களவர்கள் அதிகமாக வாக்களிக்கும் நபர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால் தமிழர்கள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நாடு சிங்களவர்களுக்கானது என்ற முறையில் அதிபர் தேர்தலில் போட்டி நிலவுகிறது. இந்த கொள்கைதான் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களிடையே இனவாத மோதலுக்கு காரணமாகிறது, கடந்த 75 ஆண்டுகளாக ஊழல்களுக்கும், பலி வாங்குதலுக்கும் இந்த அரசியல் களம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலங்கை விடுதலை 1948: இது தோல்வி அடைந்த அரசியலமைப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முன்னொரு காலத்தில் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த பகுதியாகும். 1948ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபோது பெரும்பான்மையாக இருந்த சிங்களவர்களிடம் ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதுவே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு: வடகிழக்கு மக்களின் கோரிக்கை தமிழர்களின் நிலங்கள் மீண்டும் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்; உரிமைகள் மீட்கப்பட வேண்டும்; இனவாத ஒழிப்பை நிறுத்த ராணுவமயமாக்கல்; ராணுவத்தை திரும்ப பெற அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு" என்றார்.
எவ்வாறாயினும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முன்னணி வேட்பாளர்கள் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.