தமிழ்நாடு

tamil nadu

KKR vs RR: ரிங்கு சிங் அதிரடியால் ராஜஸ்தானை பழிதீர்த்தது கேகேஆர் !

By

Published : May 3, 2022, 7:22 AM IST

Updated : May 3, 2022, 7:49 AM IST

ரிங்கு சிங் அதிரடியால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணியிடம் அடைந்திருந்த படுதோல்விக்கு, கொல்கத்தா அணி பழிதீர்த்தது.

KKR vs RR
KKR vs RR

மும்பை:ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று (மே 2) ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கேட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸை இழந்த ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் சாம்சன் அரைசதம் கடந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ், அன்குல் ராய், சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 153 என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா பேட்டர்கள் மிகவும் பொறுமையாக விளையாடினர். ஃபின்ச், பாபா இந்திரஜித் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறினாலும், அடுத்த வந்த கேப்டன் ஷ்ரேயஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரும் 34 (32) ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா 12.5 ஓவரில் 92/3 என்ற நிலையில் இருந்தது. ஒருமுனையில், நிதீஷ் ராணா வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக விளையாட, புதிதாக களம்கண்ட ரிங்கு சிங் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினார். இதனால், கடைசி 2 ஓவர்களுக்கு கேகேஆர் அணிக்கு 18 ரன்களை தேவைப்பட்டன. அதுவரை 3 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டும் கொடுத்திருந்த பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீச வந்தார். ஸ்ட்ரைக்கில் ரிங்கு இருந்தார்.

பதறிய பிரசித்: பிரசித் அந்த ஓவரில் 3 வைடுகள் உள்பட 9 பந்துகளை வீசி 17 ரன்களை கொடுத்தார். அதில், நான்காவது பந்து வைடாக வீசப்பட்ட நிலையில், சஞ்சு சர்ச்சையான வகையில் ரிவ்யூ கேட்டார். பந்து பேட்டை உரசிய சத்தம் சுத்தமாக கேட்கவில்லை என்றாலும், சஞ்சு சாம்சன் நடுவரின் செயலுக்கு ஆட்சேபம் தெரிவிப்பது போன்று இருந்தது என நெட்டீசன் இதை விமர்சனம் செய்து வருகின்றனர். பின்னர், கடைசி ஓவரில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டாதல், முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பி ஆட்டத்தை நிதீஷ் ராணா முடித்துவைத்தார். இதன்மூலம், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னேறும் கேகேஆர்: முன்னதாக, நடப்பு தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. அதில், ராஜஸ்தான் அணி சுழற்பந்துவீச்சாளர் சஹாலின் அதிரடியான ஹாட்ரிக்கால், கொல்கத்தா அணி அந்த போட்டியை நழுவவிட்டது. தற்போது, இப்போட்டியை வென்றதன் மூலம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு ராஜஸ்தானை, கேகேஆர் பழிதீர்த்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 6 தோல்வி) 7ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 4 தோல்வி) 3ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: SRH vs CSK: 'அனைத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாது...' - வெற்றிக்கு பின் தோனி சொல்லிய பாடம்

Last Updated :May 3, 2022, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details