தமிழ்நாடு

tamil nadu

IPL 2021: வெங்கடேஷ், திரிபாதி அட்டாக்கால் ஆட்டம் கண்டது மும்பை!

By

Published : Sep 24, 2021, 6:27 AM IST

KKR

மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.

பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

முடங்கியது மும்பை

இதையடுத்து, இரண்டாம்கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 34ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று (செப். 23) மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி காக் 55 ரன்களும், ரோஹித் 33 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சு தரப்பில் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிரடி ஆறு ஓவர்கள்

156 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தாவின் பேட்டிங் படை களமிறங்கியது. போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா ஒரு சிக்சரை அடித்து, மொத்தம் 15 ரன்களை எடுத்தனர். மில்னேவின் அடுத்த ஓவரிலும் 15 ரன்கள் எடுத்த இந்த ஜோடி, மூன்றாவது ஓவரில் பும்ரா உடைத்தார்.

பும்ரா வீசிய ஒரு ஸ்லோவர் டெலிவரியில் சுப்மன் கில் 13 (9) ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்த களமிறங்கிய திரிபாதி, வெங்கடேஷ் உடன் இணைந்து வலுவான பாட்னர்ஷிப்பை அமைத்தார்.

இந்த ஜோடி காட்டிய அதிரடியில், கொல்கத்தா அணி பவர்பிளே முடிவில் 63 ரன்களை எடுத்திருந்தது. வெங்கடேஷின் பவர் ஹிட் ஷாட்கள் அனைத்தும் பவுண்டரிகளை நோக்கிப் படையெடுத்தன. இந்த ஜோடி அனைத்து ஓவர்களிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்துவந்த நிலையில், 10 ஓவர்கள் முடிவில் 111 ரன்களைக் குவித்து மிரட்டியது.

'வெரி குட்' வெங்கடேஷ்

மேலும், வெங்கடேஷ் ஐயர் 25 பந்துகளிலேயே தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இப்போட்டி அவரது இரண்டாவது ஐபிஎல் போட்டி என்பது கவனிக்கத்தக்கது.

வெற்றி நோக்கி வீருநடை போட்டுக்கொண்டிருந்த ஜோடியை உடைக்க பும்ரா மீண்டும் வந்தார். பும்ரா வீசிய மற்றொரு ஸ்லோவர் டெலிவரியில் வெங்கடேஷ் ஐயரும் போல்டாகி ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர்தான் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்தார். அதன்பின்னர், களமிறங்கிய கேப்டன் மார்கன், ஒரு சிக்சர் உள்பட 7 (8) ரன்களில் பும்ராவிடமே வீழ்ந்தார்.

15ஆவது ஓவரின் முடிவிலேயே கொல்கத்தா இலக்கை சமன்நிலைப்படுத்திவிட்ட நிலையில், அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே, நிதீஷ் ராணா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், மும்பை அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி ஆறாவாது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆட்டநாயகன் நரைன்

கொல்கத்தா அணி தரப்பில் ராகுல் திரிபாதி 74 (42), நிதீஷ் ராணா 5 (2) ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும், கொல்கத்தா அணியில் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் கொடுத்து, முக்கிய விக்கெட்டான ரோஹித் சர்மாவை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

துபாயில் இன்று (செப். 24) நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மூன்றாம் இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details