தமிழ்நாடு

tamil nadu

DC VS SRH : டெல்லி அணி 2-வது வெற்றி! கடைசி இடத்தை தக்கவைக்க கடும் போராட்டம்!

By

Published : Apr 25, 2023, 6:42 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ipl 2023
ipl 2023

ஐதராபாத் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐதராபாத் சன்ரைசஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர், டெல்லி வீரர்கள் பேட்டிங் செய்ய அழைத்தார்.

டேவிட் வார்னரும், பிலிப் சால்ட்டும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கமே டெல்லி அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் தொடக்க வீரர் சால்ட் டக் அவுட்டாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வார்னரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 21 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிட்சேல் மார்ஷ் 25 ரன், சர்பரஸ் கான் 10 ரன் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த மணீஷ் பாண்டேவையும் (34 ரன்) வாஷிங்டன் சுந்தர் மற்றும் கிளெஸ்சன் கூட்டாக சேர்ந்து ரன் அவுட்டாகி வெளியேற்றினர்.

இதனால் டெல்லி அணி ஆட்டம் காணத் தொடங்கியது. இறுதியாக அக்சர் பட்டேல் (34 ரன்) மட்டும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடி அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் கிளெஸ்சன் மட்டும் 3 வீரர்களை ரன் அவுட்டாகி வெளியேற்றி உள்ளார்.

ஐதராபாத் அணியில் தமிழக வீரர்கள் வாஷிடங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், நடராஜன் 1 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறிய இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணிக்கும் தொடக்க விக்கெட் ராசி இல்லை என்றே கூறலாம். தொடக்க ஆட்டக்காரர் ஹேரி ப்ரூக் 7 ரன்கள் மட்டும் எடுத்து ஆன்ரிச் நோர்ஜே பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ராகுல் திரிபாதி 15 ரன், அபிஷேக் சர்மா 5 ரன், கேப்டன் எய்டன் மார்க்ராம் 3 ரன் என தொடர்ச்சியாக வெளியேறி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் போராடி வந்தார். இருப்பினும் அவரும் 1 ரன்னில் அரை சதத்தை கோட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு உறுதுணையாக இருந்த ஹென்ரிச் கிளெஸ்சனும் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணியில் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் பட்டேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

7 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 வெற்றி 5 தோல்வி என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. தொடரில் நீடிக்க வேண்டும் என்றால் வரும் ஆட்டங்களில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் டெல்லி அணி உள்ளது.

இதையும் படிங்க :CSK Vs KKR : கொல்கத்தாவை ஊதித் தள்ளிய சென்னை! சொந்த ஊரில் சின்ராசுக்கு ஏற்பட்ட சோகம்!

ABOUT THE AUTHOR

...view details