பெங்களூரு:கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் 05ஆம் தேதி தொடங்கப்பட்ட 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில் அபாரமாக ஆடிய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 16 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே போல் நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய அணியாகக் கருதப்பட்டாலும் இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் நெதர்லாந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. அதேபோல் இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைதானம் எப்படி:பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங் செய்வதற்கு உகந்ததாகக் காணப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 14 முறை சேஸ் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா அல்லது பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
நெதர்லாந்து அணி:மேக்ஸ் ஓ'டவுட், வெஸ்லி பராசி, கொலின் அக்கர்மேன், சிப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், தேஜாண்டமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.
நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேற வேண்டும் என நெதர்லாந்தும், தொடரில் தோல்வியே காணாத அணி என்ற பெருமையைத் தக்க வைக்க வேண்டும் என இந்திய அணியும் முனைப்புடன் செயல்படும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க:இலங்கை அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்தது ஐசிசி!