தமிழ்நாடு

tamil nadu

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - அரியானா முதல் முறை சாம்பியன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 10:45 PM IST

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக அரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Vijay Hazare Trophy
Vijay Hazare Trophy

ராஜ்கோட் :விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. குரூப், கால் இறுதி மற்றும் அரைஇறுதி சுற்று நிறைவு பெற்ற நிலையில் அதில், அரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அரியானா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அரியானா அணியின் இன்னிங்சை யுவராஜ் சிங் மற்றும் அங்கித் குமார் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பமே அரியானா அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது.

தொடக்க வீரர் யுவராஜ் சிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹிமான்ஷூ ரானா நீண்ட நேரம் நீடிக்கவில்லை 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 41 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து அரியானா அணி தவித்தது. இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரர் அங்கித் குமாருடன் கூட்டணி சேர்ந்த கேப்டன் அசோக் மெனாரியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அதேநேரம் இந்த ஜோடி ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்புவதில் தவறவில்லை. அபாரமாக விளையாடிய அங்கித் குமார் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கேப்டன் அசோக் மெனாரியாவும் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து சீரான இடைவெளியில் அரியானா அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

50 ஓவர்கள் முடிவில் அரியானா அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. இறுதி கட்டத்தில் சுமித் குமார் 28 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். ராஜஸ்தான் அணி தரப்பில் அங்கித் சவுத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

தொடக்க வீரர் அப்ஜித் தோமரை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். கடைசி வரை போராடிய அப்ஜித் தோமர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 257 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதையும் படிங்க :சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் ரோகித் சர்மா! முன்னாள் வீரர் பத்ரிநாத் சூசகம்! என்ன சொன்னார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details