தமிழ்நாடு

tamil nadu

ENG vs IND: பேர்ஸ்டோவ் சதத்தையும் சமாளித்தது இந்தியா - தொடரும் ஆதிக்கம்!

By

Published : Jul 4, 2022, 9:13 AM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் களத்தில் உள்ள நிலையில், இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ENG vs IND
ENG vs IND

பர்மிங்ஹாம் (இங்கிலாந்து):இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில், டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 416 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் (ஜூலை 2) ஆட்டநேர முடிவில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்தது.

நிதானத்தில் பேர்ஸ்டோவ்: இந்நிலையில், பேர்ஸ்டோவ் 12 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் ரன்னேதும் இன்றியும் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தடுமாறி வந்த இங்கிலாந்து அணிக்கு இந்த ஜோடி புத்துணர்வு ஊட்டியது. பேர்ஸ்டோவ் ஆரம்பத்தில் பொறுமை காட்ட, ஸ்டோக்ஸ் நம்பிக்கையுடன் விளையாடினார்.

போரை தொடங்கிய பேர்ஸ்டோவ்:இந்த சமயத்தில், பேர்ஸ்டோவ் - விராட் கோலி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர், பேர்ஸ்டோவின் ஆட்ட அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. கிடைத்த அத்தனை நல்ல வாய்ப்புள்ள பந்துகளையெல்லாம் பவுண்டரிக்கு விரட்டினார். இதற்கிடையே, ஸ்டோக்ஸ் 25 ரன்களுக்கு வெளியேறினாலும், பேர்ஸ்டோவ் தனது வேகத்தை குறைக்கவேயில்லை. 81 பந்துகளில் அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ், அடுத்த 38 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

132 ரன்கள் பின்னிலை:சாம் பில்லிங்ஸ் உடன் ஏழாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேர்ஸ்டோவ், 106 ரன்களில் அவுட்டானார். ஷமி வீசிய பந்து, பேட்டின் முனையில்பட்டு (Edge) முதல் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலியிடம் தஞ்சம் புகுந்தது. இதன்பின், சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ் மட்டும் சற்றுநேரம் தாக்குபிடித்தனர். இதனால், இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 132 ரன்கள் பின்னிலை பெற்றது.

கோலியும் காலி:இந்திய அணி பந்துவீச்சில் சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2, ஷர்துல் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, ஆடிய இந்திய அணி ஓப்பனர் கில் 4 ரன்களில் மீண்டும் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். சற்றுநேரம் தாக்குபிடித்த விகாரி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா - கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நான்காம் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 32 ரன்கள் எடுத்தபோது, கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

களத்தில் ரிஷப்:முதல் இன்னிங்ஸில் 146 ரன்களை எடுத்த அதே வேகத்துடன் ரிஷப் இந்த இன்னிங்ஸையும் தொடங்கினார். புஜாரா 139 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், நேற்றைய (ஜூலை 3) ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்து, 257 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

தற்போது, புஜாரா 50 ரன்களுடனும், ரிஷப் பந்த் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

புஜாரா - ரிஷப் பந்த்

இந்த ரன்கள் போதுமா...?: மேலும், இன்றைய ஆட்டத்தில் பெரும்பாலான ஓவர்களைப் பிடித்து 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால்தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏனென்றால், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியால் இங்கிலாந்து 50 ஓவர்களிலேயே 299 ரன்கள் அடித்து ஆட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நாள் ஆட்டம்

முதல் செஷன்:இங்கிலாந்து - 18.3 ஓவர்கள் - 116 ரன்கள்; 1 விக்கெட்

இரண்டாம் செஷன்:இங்கிலாந்து - 16 ஓவர்கள் - 84 ரன்கள் - 4 விக்கெட்டுகள்

இந்தியா - 13 ஓவர்கள் - 37 ரன்கள்; 1 விக்கெட்

மூன்றாம் செஷன்:இந்தியா - 32 ஓவர்கள் - 88 ரன்கள்; 2 விக்கெட்டுகள்

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: 3ஆவது இந்திய அணியில் இடம்பெற்ற 2 தமிழ்நாட்டு வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details