தமிழ்நாடு

tamil nadu

பிரித்விஷா, ரஹானே இருந்தும் சுருண்ட மும்பை... தமிழ்நாடே பரவால்ல

By

Published : Dec 25, 2019, 10:42 PM IST

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் மூன்றாம் சுற்றுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், மும்பை அணி 114 ரன்களுக்கு சுருண்டது.

Mumbai
Mumbai

நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கின. இதில், இந்தூரில் நடைபெற்றுவரும் போட்டியில் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - மத்திய பிரதேச அணிகள் மோதின.

முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய தமிழ்நாடு:

ஏற்கனவே இரண்டாம் சுற்று ஆட்டத்தில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முருகன் அஸ்வின், அபினவ் முகுந்த் ஆகியோர் தமிழ்நாடு அணியில் பங்கேற்காத நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் அணியில் இடம்பெறவில்லை.

பேட்டிங்கில் சொதப்பிய தமிழ்நாடு:

இதையடுத்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி கேப்டன் பாபா அபராஜித், தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ, ஹரி நிஷாந்த் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னிலேயே அவுட்டாகினர். இறுதியில் தமிழ்நாடு அணி 59 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கங்கா ஸ்ரீதர் ராஜூ 43 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 22 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், பாபா அபராஜித் 11 பவுண்டரிகள் அடித்து 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்திலிருந்தார். மத்திய பிரதேச அணி தரப்பில் ஈஷ்வர் பாண்டே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது.

மும்பை - ரயில்வேஸ்

இதேபோல், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் மற்றொரு போட்டியில் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி, ரயில்வேஸ் அணியுடன் மோதியது.

படுமோசமாக இருந்த மும்பை பேட்டிங்:

இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பிரித்விஷா, ரஹானே, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தும் 28.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரித்விஷா 12 ரன்களிலும், ரஹானே ஐந்து ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தார்.

ரயில்வேஸ் அணி தரப்பில் பிரதீப் ஆறு விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் ரயில்வேஸ் அணி 37 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


இதையும் படிங்க:
18 மாதங்களுக்குப் பிறகு முதல் தரப் போட்டியில் சதம் அடிக்கும் ஷிகர் தவான்
!

ABOUT THE AUTHOR

...view details