தமிழ்நாடு

tamil nadu

#T20WorldCup: ஸ்மித் அதிரடியால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!

By

Published : Oct 30, 2019, 10:55 AM IST

துபாய்: ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு, நான்காவது அணியாக நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது.

namibiya qualified

T20WorldCup: ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாடவுள்ளன. இதில் விளையாட ஏற்கனவே பத்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டதால், எஞ்சியுள்ள அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் ஏற்கனவே அயர்லாந்து, பப்புவா நியூ கினியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் தேர்வடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் நமீபிய அணி ஓமன் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நமீபிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அரை சதமடித்த மகிழ்ச்சியில் ஜேஜே ஸ்மித்

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நமீபிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பார்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த கொட்ஸியும் 4 ரன்களில் வெளியேற, அந்த அணி 36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் அதிரடியாக விளையாடிய வில்லியம்ஸ் மற்றும் ஜேஜே ஸ்மித், அணியின் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 25 பந்துகளில் 59 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நமீபிய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. ஓமன் அணி சார்பில் பிலல் கான் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர் காவர் அலி, சிறிது நிலைத்து ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் இரண்டு இலக்க ரன்களைக்கூட அடிக்காததால், ஓமன் அணி 19.1 ஓவர்களில் 107 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் நமீபிய அணி டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுத் தொடரின் இரண்டாவது பிளே-ஆஃப் சுற்றில், ஓமன் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நமீபியா நான்காவது அணியாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ளது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை டி20 தொடருக்கு நெதர்லாந்து மூன்றாவதாக தகுதி பெற்றது..

ABOUT THE AUTHOR

...view details